செய்திகள்

படகில் வழி தவறி வந்த இலங்கை தம்பதிக்கு 8-வது முறையாக காவல் நீட்டிப்பு

Published On 2016-09-15 09:59 IST   |   Update On 2016-09-15 09:59:00 IST
படகில் வழி தவறி வந்த இலங்கை தம்பதிக்கு 8-வது முறையாக காவலை நீட்டித்து வேதாரண்யம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
வேதாரண்யம்:

இலங்கை வவுனியாவை அடுத்த மகரம்மை குளத்தை சேர்ந்தவர் சுஷ்யந்த் (23). விவசாயி. இவரது மனைவி துவாரகா (22) இவர்களது மகள் சகிதா (1).

இவர்கள் 3 பேரும் கடந்த ஜூன் மாதம் 7-ந் தேதி கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் ஆலய திருவிழாவுக்கு பொதுமக்களுடன் ஒரு படகில் சென்றனர்.

விழா முடிந்ததும் 3 பேரும் படகு மாறி ஏறி தூங்கி விட்டனர். அந்த படகின் கயிறு அறுந்து நடுக்கடலுக்கு வந்து விட்டது.

அந்த வழியாக சென்ற நாகை மீனவர்கள் படகில் தத்தளித்த 3 பேரையும் மீட்டு நாகை அழைத்து வந்தனர். பின்னர் வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

அவர்கள் மீது பாஸ்போர்ட் இல்லாமல் வந்ததாக வழக்கு பதிந்து கைது செய்து வேதாரண்யம் குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிபதி தீனதயாளன் உத்தரவுப்படி 3 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். காவல் முடிவடைந்ததையடுத்து 3 பேரும் வேதாரண்யம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 28-ந் தேதி வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார். 8-வது முறையாக இவர்களுக்கு காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 3 பேரும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News