செய்திகள்

பசியால் தவிக்கும் என்னை அனாதை இல்லத்தில் சேருங்கள்: ஈரோடு ரெயில் நிலையத்தில் கதறிய பெண்

Published On 2016-09-11 18:47 IST   |   Update On 2016-09-11 18:47:00 IST
வயதான பெண் ஒருவர் கவனிக்க யாரும் இல்லாததால் பசியால் தவிக்கும் என்னை அனாதை இல்லத்தில் சேருங்கள் என்று ஈரோடு ரெயில்வே போலீசாரிடம் கூறினார்.

ஈரோடு:

ஈரோடு ரெயில் நிலையத்தில் இன்று காலை ரெயிலில் செல்வதற்காக ஏராளமான பேர் வந்தனர். இதே போல ஈரோட்டுக்கு வந்தவர்கள் அவசர அவசரமாக தங்களுக்கு ஊருக்கு செல்வதாக புறப்பட்டு சென்றனர்.

அப்போது 3-வது பிளாட் பாரத்தில் படுத்து இருந்த வயதான ஒரு பெண் அழுதபடி இருந்தார். இவரை அந்த வழியாக சென்ற யாருமே கண்டு கொள்ளவில்லை.

அப்போது அந்த வழியாக ரெயில்வே போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் பிளாட்பாரத்தில் அழுதபடி படுத்திருந்த அந்த மூதாட்டியிடம் விசாரித்தனர்.

அப்போது அவர் ‘‘என்னை கவனிக்க யாருமே இல்லை. நான் அனாதையாகி விட்டேன். இந்த வயதான காலத்தில் தினமும் பசியால் துடிக் கிறேன். எனவே என்னை ஏதாவது முதியோர் இல்லத்தில் சேருங்கள். அங்கு சென்றாலாவது எனக்கு வயிறார சாப்பாடு கிடைக்கும்’’ என்று அழுதபடியே கூறினார்.

அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்த ரெயில்வே போலீசார் அவரிடம் மேலும் விசாரித்தனர்.

அப்போது அவரது பெயர் பவானி (வயது 70). சிதம்பரம் கவரப் பேட்டையில் உள்ள மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சம்பந்தம் என்பரின் மனைவி என்பதும் தெரியவந்தது.

எனக்கு குழந்தைகள் இல்லாததால் தனது கணவர் வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இப்போது கணவர் இறந்த நிலையில் 2-வது மனைவியின் மகன்கள் என்னை கவனிக்க வில்லை என்று கூறினார்.

இதனால் போலீசார் அந்த மூதாட்டிக்கு காலை உணவு வாங்கி கொடுத்தனர். முதியோர் இல்லத்தில் சேர்க்கவும் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

Similar News