செய்திகள்

அறந்தாங்கி அருகே கோவில் கட்டுவதில் இருதரப்பினர் மோதல்: 144 தடை உத்தரவு அமல்

Published On 2016-08-08 10:28 IST   |   Update On 2016-08-08 10:28:00 IST
அறந்தாங்கி அருகே கோவில் கட்டுவது தொடர்பாக இருதரப்பினருக்டையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள பாண்டிக்குடி கிராமத்தில் வெற்றி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். பழமையான இந்த கோவிலை இடித்து விட்டு புதிதாக கோவில் கட்ட அப்பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர்.

இதற்கு அந்த பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். கோவில் உள்ள இடம் தனக்கு சொந்தமானது, எனவே கோவில் கட்டக்கூடாது என்றார். மேலும் மதுரை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்.

இதே போல் பொதுமக்களும் வழக்கு தொடர்ந்தனர். அதில் அந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது, எனவே புதிதாக கோவில் கட்ட அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு கோவிலில் திருவிழா நடத்த தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் பொதுமக்கள், பழைய கோவிலை இடித்து விட்டு புதிதாக கோவில் கட்டும் பணியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கினர். தற்போது 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. முழுமையாக பணி முடிந்ததும் கும்பாபிஷேகம் நடத்த பொதுமக்கள் திட்டமிட்டு இருந்தனர்.

இதனிடையே ரவிச்சந்திரன் அவரது ஆதரவாளர்களுடன் சேர்ந்து அறந்தாங்கி ஆர்.டி.ஓ. ரம்யா தேவியிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கும்பாபிஷேகம் நடத்தினால் பிரச்சினை ஏற்படும். எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அறந்தாங்கி தாசில்தார் மணிவண்ணன், 144 தடை உத்தரவை பிறப்பித்தார். அதில் வெற்றி விநாயகர் கோவில் கட்டுவதற்கும், அங்கு கும்பாபிஷேகம் நடத்துவதற்கும் தடை விதித்து உத்தரவிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாண்டிக்குடி பகுதி பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. அசம்பாவித சம்பவங்கள் நிகழாதவாறு இருக்க பாண்டிக்குடி கிராமத்திலும், வெற்றி விநாயகர் கோவில் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Similar News