செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் மகன்கள் பயங்கர மோதல்: தம்பி பலி

Published On 2016-06-19 17:39 IST   |   Update On 2016-06-19 17:39:00 IST
ஜெயங்கொண்டம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் மகன்கள் மோதலில் தம்பி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த ஆண்டிமடம் அருகே உள்ள சிலம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவர் விழுப்புரம் மாவட்டம் இளவரசன்கோட்டையில் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வருகிறார்.

இவரது மனைவி செல்லம்மாள். இவர்களுக்கு 4 மகன்கள் உள்ளனர். முதல் மகன் அறிவுசெல்வன் தனது மனைவியுடன் வடலூரிலும், மூன்றாவது மகன் வெற்றிச்செல்வன் தனது மனைவியுடன் திருப்பூரில் வசித்து வருகிறார்கள்.

இரண்டாவது மகன் செந்தமிழ்ச்செல்வன் (26) மற்றும் 4-வது மகன் செல்வமுருகன் (23) இருவரும் டிப்ளமோ படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருந்து வருகின்றனர்.

செந்தமிழ்ச்செல்வன், செல்வமுருகன் இருவரும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வீட்டில் சண்டை போட்டுக் கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

கடந்த சில தினங்களாக செல்வமுருகன் சொத்தில் பங்கு கேட்டும், தனக்கு திருமணம் செய்துவைக்ககோரியும் அவரது தாயார் செல்லம்மாளிடம் சண்டை போட்டு வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று செந்தமிழ்ச்செல்வன், செல்வமுருகன் இருவரும் இடையக்குறிச்சியில் உள்ள டாஸ்மாக்கில் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளனர்.

செல்வமுருகன் தனது தாயிடம் சண்டை போட்டுள்ளார். இதைபார்த்த வெற்றிச்செல்வன் தனது தம்பியை தடுத்து தாக்கியுள்ளார். இதனால் அண்ணன், தம்பி இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர். இதில் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்த செல்வமுருகன் அருகில் உள்ள கருங்கல் உரலில் தலை அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆண்டிமடம் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான செல்வமுருகன் உடலை கைப்பற்றி அவரது அண்ணன் செந்தமிழ்ச் செல்வனை தேடி வந்தார்.

இதற்கிடையே செந்தமிழ்ச் செல்வன் தம்பியை கொன்று விட்டோமே என்று மன வேதனையில் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டு வீட்டுக்கு அருகில் மயங்கி கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

குடிபோதையில் சப்- இன்ஸ்பெக்டரின் இரண்டு மகன்களும் அடித்துக் கொண்டு ஒருவர் இறந்தும், மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது ஆண்டிமடம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News