தமிழ்நாடு

குவைத்தில் உணவின்றி தவிக்கும் 20 தமிழர்களையும் மீட்க வேண்டும்- ராமதாஸ் வலியுறுத்தல்

Published On 2023-08-24 06:45 GMT   |   Update On 2023-08-24 06:45 GMT
  • குவைத் நிறுவனத்தின் துரோகம் மற்றும் மோசடி குறித்து அங்குள்ள இந்திய தூதரகத்திலும் கடந்த ஜூலை 23-ந் தேதி அவர்கள் புகார் செய்துள்ளனர்.
  • 20 தமிழ் இளைஞர்களையும் தாயகத்திற்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20 இளைஞர்கள் கடந்த ஓராண்டுக்கு முன் சென்னையில் உள்ள ஆள்தேர்வு நிறுவனத்தின் மூலமாக குவைத் நாட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் தூய்மைப் பணியாளர்களாக பணிக்கு சென்றனர். அதற்காக சென்னையில் உள்ள ஆள்தேர்வு நிறுவனத்திற்கு ரூ.1.05 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை கட்டணம் செலுத்தியுள்ளனர். குவைத் நிறுவனத்தில் அவர்களுக்கு மாத ஊதியம் ரூ.20,000 (75 குவைத் தினார்) வீதம் இரு ஆண்டுகளுக்கு வேலை வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஓராண்டு பணி முடிந்த நிலையில், வேலைவாய்ப்பை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டுமானால் ரூ.1.25 லட்சம் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று குவைத் நிறுவனம் கட்டாயப்படுத்தியிருக்கிறது.

அவர்களை வேலையை விட்டு நீக்கிய நிறுவனம், அவர்களின் கடவுச்சீட்டை பறித்து வைத்துக் கொண்டது. அவர்களின் உடமைகள் அனைத்தையும் தூக்கி வீசிய நிறுவன அதிகாரிகள், அவர்கள் தங்குவதற்காக அளிக்கப்பட்டிருந்த இடத்தையும் மூடிவிட்டனர். அதனால், 20 இளைஞர்களும் கடந்த ஒரு மாதமாக தங்குவதற்கு இடம் இல்லாமலும், உண்ண உணவு கிடைக்காமலும் குவைத்தில் வாடுகின்றனர்.

குவைத் நிறுவனத்தின் துரோகம் மற்றும் மோசடி குறித்து அங்குள்ள இந்திய தூதரகத்திலும் கடந்த ஜூலை 23-ந் தேதி அவர்கள் புகார் செய்துள்ளனர். ஆனால், அதன்பின் ஒரு மாதம் ஆகியும் இது வரை எந்த நடவடிக்கையையும் இந்தியத் தூதரகம் மேற்கொள்ளவில்லை.

குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் வழியாக சம்பந்தப்பட்ட குவைத் நிறுவனத்திடமிருந்து தொழிலாளர்களின் கடவுச்சீட்டு, ஊதிய நிலுவை ஆகியவற்றை பெற்றுக் கொடுத்து, 20 தமிழ் இளைஞர்களையும் தாயகத்திற்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News