தமிழ்நாடு

தாம்பரம் மாநகராட்சியுடன் மேலும் 15 பஞ்சாயத்துக்கள் இணைகிறது- 115 சதுர கி.மீட்டராக விரிவடையும்

Published On 2023-09-29 07:57 GMT   |   Update On 2023-09-29 07:57 GMT
  • தாம்பரம் மாநகராட்சிக்குள் புதிதாக மேலும் 6 லட்சம் பேர் வருவார்கள்.
  • மாநகராட்சியுடன் இணையும் போது அதன் பகுதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை திட்டம், சாலை வசதி மேம்படும்.

தாம்பரம்:

தாம்பரம் மாநகராட்சி கடந்த 2021-ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்டது. தற்போது 87.64 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 70 வார்டுகளுடன் 5 மண்டலங்களாக உள்ளது. சுமார் 10 லட்சம் பொது மக்கள் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தாம்பரம் மாநகராட்சியுடன் மேலும் 15 பஞ்சாயத்துக்களை இணைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.

அதன்படி அகரம்தென், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், கவுல்பஜார், முடிச்சூர், பெரும்பாக்கம், நன்மங்களம், பொழிச்சலூர், திரிசூலம், ஒட்டியம்பாக்கம், திருவஞ்சேரி, வேங்கை வாசல், மதுரபாக்கம், மூவரசம்பட்டு, சித்தாலப்பாக்கம் ஆகிய பஞ்சாயத்துக்கள் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைய உள்ளன. இதனால் தாம்பரம் மாநகராட்சியின் மொத்த பரப்பளவு 115 சதுர கிலோ மீட்டராக அதிகரிக்கும். இந்த பஞ்சாயத்துக்கள் மண்டல அதிகாரிகள் மேற்பார்வையில் இருக்கும். இந்த புதிய பஞ்சாயத்துக்கள் இணைப்பதன் மூலம் தாம்பரம் மாநகராட்சிக்குள் புதிதாக மேலும் 6 லட்சம் பேர் வருவார்கள்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, தாம்பரம் மாநகராட்சியுடன் இணையும் போது அதன் பகுதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை திட்டம், சாலை வசதி மேம்படும். பஞ்சாயத்துக்கள் இணைப்புக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 2027-ம் ஆண்டு வரை மண்டல அலுவலர்கள் ஊராட்சிகளை நிர்வகிப்பார்கள். ஒவ்வொரு மழையின்போது முடிச்சூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்படும்.

இந்த இணைப்புகள் மூலம் வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மேலும் எடுக்க முடியும் என்றனர்.

Tags:    

Similar News