ஒரு 'டீ'க்கு ஒரு கிலோ தக்காளி இலவசம்- டீ கடையில் குவிந்த பொதுமக்கள்
- டீ கடையில் பொதுமக்கள் குவிந்தனர்.
- பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஒரு டீ வாங்கி குடித்துவிட்டு, இலவசமாக ஒரு கிலோ தக்காளியை மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர்.
கொளத்தூர்:
சென்னை கொளத்தூர் கணபதி ராவ் காலனியில் நேற்று மாலை டேவிட் என்பவர் புதிதாக டீ கடை ஒன்றை திறந்தார். திறப்பு விழா சலுகையாக தனது கடையில் "ஒரு டீ வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம்" என்று அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு அப்பகுதி மக்களிடையே காட்டுத்தீப்போல பரவியது.
இதனால் அந்த டீ கடையில் பொதுமக்கள் குவிந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், நீண்ட வரிசையில் நின்று ஒரு டீ வாங்கி குடித்துவிட்டு இலவசமாக ஒரு கிலோ தக்காளியை மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர். டீ கடை முன்பு பொதுமக்கள் திரண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து டீ கடைக்காரர் டேவிட் கூறும்போது, "புதியதாக டீ கடை திறந்ததால் ரூ.180-க்கு விற்கும் தக்காளியை இலவசமாக வழங்க முடிவு செய்து இந்த அறிவிப்பை வெளியிட்டேன். இன்றும்(வியாழக்கிழமை), நாளையும்(வெள்ளிக்கிழமை)இதுபோல் ஒரு டீக்கு ஒரு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும்" என்றார்.