விளையாட்டு

உலக கோப்பை ஆக்கி போட்டி- நாளை வேல்சுடன் மோதும் இந்தியா

Published On 2023-01-18 06:47 GMT   |   Update On 2023-01-18 06:47 GMT
  • இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.
  • 2-வது போட்டியில் இங்கிலாந்துடன் கோல் எதுவுமின்றி ‘டிரா’ செய்தது.

15-வது உலக கோப்பை ஆக்கிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வர், ரூர்கெலா ஆகிய 2 இடங்களில் நடைபெற்று வருகிறது.

இந்தப்போட்டியில் 16 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணி கால் இறுதிக்கு நேரடியாக தகுதி பெறும். மற்ற 4 அணிகள் 2-வது சுற்று மூலம் முன்னேறும்.

ஹர்மன் பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய நாடுகள் அந்த பிரிவில் உள்ளன.

இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. 2-வது போட்டியில் இங்கிலாந்துடன் கோல் எதுவுமின்றி 'டிரா' செய்தது.

இந்திய அணி 3-வது மற்றும் கடைசி 'லீக்' ஆட்டத்தில் வேல்சை நாளை (19-ந் தேதி) எதிர்கொள்கிறது. இரவு 7 மணிக்கு புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் இந்த போட்டி தொடங்குகிறது.

இந்திய அணி கால் இறுதியில் நுழைய வேல்சை கண்டிப்பாக அதிக கோல்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டும். இல்லையென்றால் இங்கிலாந்து அணி ஸ்பெயினிடம் தோற்க வேண்டும். ஸ்பெயின்- இங்கிலாந்து மோதும் ஆட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடக்கிறது.

இந்த பிரிவில் இங்கிலாந்து, இந்தியா ஒரு வெற்றி, ஒரு டிராவுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. ஆனால் கோல்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து முன்னேறி இருக்கிறது. ஸ்பெயின் ஒரு வெற்றியுடன் 3 புள்ளி பெற்றுள்ளது. வேல்ஸ் 2 ஆட்டத்திலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை.

'சி' பிரிவில் இருந்து நெதர்லாந்து அணி கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அந்த அணி 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

Tags:    

Similar News