விளையாட்டு

தேசிய விளையாட்டு இன்று தொடக்கம்- தமிழகத்தில் இருந்து 380 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

Published On 2022-09-29 08:14 GMT   |   Update On 2022-09-29 08:14 GMT
  • 7 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்த விளையாட்டு திருவிழா மீண்டும் அரங்கேறுகிறது.
  • இரவு 7 மணிக்கு பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டியை அதிகாரபூர்வமாக தொடங்கி வைக்கிறார்.

ஆமதாபாத்:

இந்தியாவில் கவுரவமிக்க போட்டிகளில் ஒன்றான தேசிய விளையாட்டு 1924-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. முதலில் 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட இந்த போட்டி பின்னர் நடைமுறை சிக்கல் காரணமாக சில சமயங்களில் குறிப்பிட்ட காலத்துக்குள் நடைபெறவில்லை. கடைசியாக 35-வது தேசிய விளையாட்டு 2015-ம் ஆண்டு கேரளாவில் நடைபெற்றது. அதன் பிறகு தேசிய விளையாட்டு போட்டி கோவாவில் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்ட இந்த போட்டியை நடத்த போதிய வசதியின்றி கோவா ஒதுங்கியது.

இந்த நிலையில் 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள ஆமதாபாத், காந்தி நகர், சூரத், வதோதரா, ராஜ்கோட், பவநகர் ஆகிய 6 நகரங்களில் இன்று (வியாழக்கிழமை) முதல் அக்டோபர் 12-ந் தேதி வரை நடக்கிறது. 7 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்த விளையாட்டு திருவிழா மீண்டும் அரங்கேறுகிறது. குஜராத் மாநிலம் இந்த போட்டியை நடத்துவது இதுவே முதல்முறையாகும். ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் பிரமாண்டமான தொடக்க விழா நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டியை அதிகாரபூர்வமாக தொடங்கி வைக்கிறார்.

இதில் நீச்சல், தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி, கைப்பந்து உள்பட 36 விளையாட்டுகளில் இருபாலருக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது. கோகோ, யோகா, மல்லர் கம்பம் ஆகியவை அறிமுக போட்டியாக இடம் பெறுகின்றன. 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள், சர்வீசஸ் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 7 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்கிறார்கள்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, ஒலிம்பிக் மற்றும் உலக போட்டியில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா ஆகியோர் காயம் காரணமாக விலகி விட்டனர். அதேநேரத்தில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு (மணிப்பூர்), குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா (அசாம்), நீச்சல் வீரர் ஸ்ரீஹரி நடராஜ், தடகள வீராங்கனைகள் டுட்டீ சந்த், ஹிமா தாஸ், அன்னு ராணி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் களம் காணுவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இருந்து 380 வீரர், வீராங்கனைகள் 30 பந்தயங்களில் திறமையை வெளிப்படுத்தும் ஆவலில் உள்ளனர்.

தேசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் கடந்த வாரம் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. உலக டேபிள் டென்னிஸ் போட்டி இந்த சமயத்தில் நடக்க இருப்பதால் தனியாக முன்கூட்டியே நடத்தப்பட்டது. கபடி, ரக்பி, நெட்பால், லான் பவுல்ஸ் ஆகிய போட்டிகள் ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. சைக்கிளிங் பந்தயம் மட்டும் டெல்லியில் நடத்தப்படுகிறது.

இந்த போட்டிகளை தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

கடைசியாக (2015) நடந்த தேசிய விளையாட்டில் சர்வீசஸ் 91 தங்கம் உள்பட 159 பதக்கங்கள் குவித்தது முதலிடத்தை பிடித்திருந்தது. கேரளா (54 தங்கம் உள்பட 162 பதக்கங்கள்) 2-வது இடமும், அரியானா (40 தங்கம் உள்பட 107 பதக்கங்கள்) 3-வது இடமும் பிடித்தன. தமிழக அணி (16 தங்கம், 16 வெள்ளி, 20 வெண்கலம்) 8-வது இடத்தை பெற்றது.

Tags:    

Similar News