விளையாட்டு

இந்திய வீரர்களுடன் நட்பு வேண்டாம்- பாகிஸ்தான் அணியினருக்கு மொயீன் கான் அறிவுரை

Published On 2025-02-01 08:44 IST   |   Update On 2025-02-01 08:44:00 IST
  • எங்களது வீரர்களின் ஒரு சில அணுகுமுறைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
  • களத்தில் நாங்கள் இந்திய வீரர்களுடன் பேசுவது கூட கிடையாது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் 53 வயதான மொயீன் கான் அளித்த ஒரு பேட்டியில், 'சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டங்களை பார்க்கும் போது, எங்களது வீரர்களின் ஒரு சில அணுகுமுறைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்திய வீரர்கள் களம் காணும் போது, எங்களது வீரர்கள் அவர்களது பேட்டை வாங்கி பார்க்கிறார்கள். நட்புறவுடன் பேசுகிறார்கள். நாங்கள் விளையாடிய காலத்தில், எங்களது மூத்த வீரர்கள் இதை எல்லாம் அனுமதிக்கவே மாட்டார்கள். களத்தில் நாங்கள் இந்திய வீரர்களுடன் பேசுவது கூட கிடையாது.

நீங்கள் நட்புறவுடன் பழகும் போது, அதை உங்களது பலவீனத்தின் அறிகுறியாக இந்திய வீரர்கள் எடுத்துக் கொள்வார்கள். இதை எங்களது வீரர்கள் புரிந்து கொள்வதில்லை. நட்புறவுடன் நடந்து கொள்ளும் போது, அது உங்களது போராட்ட குணத்தை குறைத்து விடும். அதனால் தானாகவே நெருக்கடிக்குள்ளாவீர்கள்' என்றார்.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்ததால், இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடத்தப்படுகிறது. இதில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான முக்கியமான மோதல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது.

Tags:    

Similar News