IPL 2025: வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி?- ஐதராபாத் அணியுடன் இன்று மோதல்
- முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி 3 வெற்றி, 7 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் இருக்கிறது.
- டெல்லி அணி 6 வெற்றி, 4 தோல்வி என 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதுகின்றன.
முன்னாள் சாம்பியனான ஐதராபாத் அணி 3 வெற்றி, 7 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் இருக்கிறது. எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று, ரன்ரேட்டை வலுப்படுத்தி, மற்ற அணிகளின் முடிவுகள் சாதகமாக அமைந்தால் மட்டுமே ஐதராபாத்துக்கு பிளே-ஆப் கதவு திறக்கும். மற்றபடி சிக்கல் தான். ஹெட், அபிஷேக், ஹென்ரிச் கிளாசென், இஷான் கிஷன், நிதிஷ்குமார் ரெட்டி, காமிந்து மென்டிஸ் என சூறாவளி பேட்ஸ்மேன்கள் அணிவகுத்து நின்றும் ஒருசேர பேட்டிங் கிளிக் ஆகாததால் தள்ளாடிக் கொண்டு இருக்கிறது. பந்து வீச்சிலும் இதே நிலைமை தான் காணப்படுகிறது. குறிப்பாக முகமது ஷமி 9 ஆட்டங்களில் 6 விக்கெட் மட்டுமே எடுத்திருப்பதுடன், ஓவருக்கு சராசரியாக 11 ரன்னுக்கு மேல் விட்டுக்கொடுத்துள்ளார். அவரது தடுமாற்றமும் ஐதராபாத்தின் பலவீனமாக தெரிகிறது.
டெல்லி அணி 6 வெற்றி, 4 தோல்வி என 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கிறது. அடுத்த சுற்றை எட்டுவதற்கு மீதமுள்ள 4 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்றாக வேண்டும். தனது கடைசி இரு ஆட்டங்களில் (பெங்களூரு, கொல்கத்தாவுக்கு எதிராக) தோல்வியை தழுவிய டெல்லி அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் காத்திருக்கிறது. ஏற்கனவே ஐதராபாத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடிய டெல்லி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.