விளையாட்டு

அதிக ரன்னில் வெற்றி- ஒருநாள் போட்டி வரலாற்றில் இந்தியா புதிய சாதனை

Published On 2023-01-16 10:40 GMT   |   Update On 2023-01-16 10:40 GMT
  • எந்த ஒருநாடும் 300 ரன்னுக்கு மேல் வித்தியாசத்தில் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது.
  • இலங்கை அணி ஒருநாள் போட்டியில் சந்தித்த மிகவும் மோசமான தோல்வி இதுவாகும்.

இலங்கை அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 317 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் ஒருநாள் போட்டி வரலாற்றில் இந்திய அணி புதிய சாதனை நிகழ்த்தியது. எந்த ஒருநாடும் 300 ரன்னுக்கு மேல் வித்தியாசத்தில் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது கிடையாது. 300 ரன்னுக்கு மேல் வெற்றியை ருசித்த முதல் அணி இந்தியாவாகும்.

இதற்கு முன்பு நியூசிலாந்து அணி அயர்லாந்து அணிக்கு எதிராக 2008ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி 290 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்ததே சாதனையாக இருந்தது. இதை முறியடித்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி புதிய வரலாறு படைத்தது.

இந்திய அணி இதற்கு முன்பு 2007 உலக கோப்பையில் பெர்முடா அணிக்கு எதிராக 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே மிகப் பெரிய வெற்றியாக இருந்தது. இந்த வெற்றி வித்தியாசம் 6-வது இடத்தில் இருக்கிறது.

ஆஸ்திரேலியா 275 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், தென் ஆப்பிரிக்கா 272 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயையும் வீழ்த்தி இருந்தது. இதே போல் தென் ஆப்பிரிக்கா 258 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இருந்தது.

இலங்கை அணி ஒருநாள் போட்டியில் சந்தித்த மிகவும் மோசமான தோல்வி இதுவாகும்.

Tags:    

Similar News