விளையாட்டு

2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த இந்தியா விருப்பம்

Published On 2024-11-06 11:21 IST   |   Update On 2024-11-06 11:21:00 IST
  • 2028-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது.
  • 2032-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனிலும் நடக்க இருக்கின்றன.

புதுடெல்லி:

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 1896-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த ஜூலை 26-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடந்தது. இதில் 200 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

2028-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனிலும் நடக்க இருக்கின்றன.

2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவது இந்தியாவின் கனவாகும். அதனை நனவாக்க தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.

இந்த நிலையில் 2036-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டியை இந்தியாவில் நடத்த விரும்புவதாக கூறி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு, இந்திய ஒலிம்பிக் சங்கம் முறைப்படி கடிதம் அனுப்பியுள்ளது. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு தகுதியான நகரங்கள், அவற்றில் இருக்கும் வசதி வாய்ப்புகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் இந்த விருப்ப கடிதத்தில் இடம் பெற்றுள்ளன. ஒலிம்பிக் போட்டியை நடத்த அனுமதி அளித்தால் இந்திய அரசு போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க என்னென்ன உதவிகளை அளிக்கும் என்று விவரங்களும் அதில் இடம் பெற்று இருக்கின்றன.

ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டும் என்ற தனது நீண்ட கால திட்டத்தை சாத்தியமாக்கும் முயற்சியில் முதல் படிக்கட்டில் காலடி எடுத்து வைத்து இருக்கும் இந்தியா அடுத்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம், போட்டியை நடத்த தங்களிடம் உள்ள வசதிகளை விரிவாக எடுத்துரைக்க பேச்சுவார்த்தை நடத்தி அதில் அவர்களை திருப்தி அடைய செய்ய வேண்டியது முக்கியமானதாகும். அதைத் தொடர்ந்து போட்டியை நடத்த உரிமம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். இறுதியில் எந்த நாட்டுக்கு போட்டியை நடத்தும் உரிமம் வழங்குவது என்பது உறுப்பு நாடுகள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் முடிவு செய்யப்படும். எனவே போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற சக நாடுகளின் ஆதரவை பெறுவதும் அவசியமானதாகும்.

இந்த போட்டியை நடத்த இந்தியா மட்டுமின்றி சவுதி அரேபியா, துருக்கி, கத்தார் உள்ளிட்ட பல வளமான நாடுகளும் வரிந்து கட்டுகின்றன. எனவே போட்டியை நடத்தும் உரிமம் பெறுவதில் கடும் போட்டி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அடுத்த ஆண்டு (2025) மார்ச் மாதம் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தேர்தலுக்கு பிறகு தான் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடு எது என்பது தீர்மானிக்கப்படும். ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பை கைப்பற்றுவது என்பது எளிதான காரியமல்ல. ஒலிம்பிக் போட்டியை நடத்தும் அதிர்ஷ்டம் இந்தியாவுக்கு அடித்தால் ஆமதாபாத் தான் போட்டிக்கான பிரதானமான நகரமாக இருக்கும் என்று தெரிகிறது.

இந்தியாவில் மட்டுமல்ல, தெற்காசியாவிலேயே இதுவரை ஒலிம்பிக் விளையாட்டு நடந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News