விளையாட்டு

பெண்கள் 20 ஓவர் போட்டியில் இந்தியா- இலங்கை இன்று மீண்டும் மோதல்

Published On 2025-12-23 08:21 IST   |   Update On 2025-12-23 08:21:00 IST
  • முதல் ஆட்டத்தில் கிடைத்த வெற்றி உத்வேகத்துடன் இந்திய வீராங்கனைகள் வரிந்து கட்டுவார்கள்.
  • இலங்கை அணி சரிவில் இருந்து மீண்டு பதிலடி கொடுக்க முயற்சிக்கும்.

இந்தியாவுக்கு வந்துள்ள சமாரி அட்டப்பட்டு தலைமையிலான இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் விசாகப்பட்டினத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை பந்தாடியது. இதில் முதலில் ஆடிய இலங்கையை 121 ரன்னில் மடக்கிய இந்தியா அந்த இலக்கை ஜெமிமா ரோட்ரிக்சின் அரைசதத்தால் (69 ரன்) 14.4 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது 20 ஓவர் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது. முதல் ஆட்டத்தில் கிடைத்த வெற்றி உத்வேகத்துடன் இந்திய வீராங்கனைகள் வரிந்து கட்டுவார்கள். பீல்டிங் தான் சற்று மந்தமாக இருந்தது. 4 கேட்ச் வாய்ப்புகளை நழுவ விட்டனர். அதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். தொடக்க ஆட்டத்தில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் வைஷ்ணவி ஷர்மா அறிமுக வீராங்கனையாக அடியெடுத்து வைத்தார். விக்கெட் எடுக்காவிட்டாலும் 4 ஓவர்களில் 16 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து இலங்கை பேட்டர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.

இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்ற தனது நனவு நனவான உற்சாகத்தில் உள்ள 20 வயதான வைஷ்ணவியின் செயல்பாடு 2-வது ஆட்டத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் இலங்கை அணி சரிவில் இருந்து மீண்டு பதிலடி கொடுக்க முயற்சிக்கும். இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Tags:    

Similar News