விளையாட்டு

கடுமையான பனிமூட்டத்தால் போட்டி ரத்து- இந்திய கிரிக்கெட் வாரியம் மீது அதிருப்தி

Published On 2025-12-18 10:34 IST   |   Update On 2025-12-18 10:34:00 IST
  • கடும் பனியால் போட்டியை நடத்துவதற்கான உகந்த சூழ்நிலை இல்லை என்பதால் அவர்கள் போட்டியை ரத்து செய்தனர்.
  • போட்டி கைவிடப்பட்டதால் நீண்ட நேரமாக காத்திருந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே லக்னோவில் நேற்று நடைபெற இருந்த 4-வது 20 ஓவர் போட்டி கடும் பனிமூட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

ஆடுகளத்தை நடுவர்கள் 6 முறை ஆய்வு செய்த பிறகே போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால் கைவிட்டனர். 7 மணிக்கு இந்த போட்டி தொடங்கவேண்டும். ஆனால் இரவு 9.25 மணி வரை நடுவர்கள் ஆட்டத்தை நடத்த முடியுமா? என்று ஆய்வு செய்தனர்.

கடும் பனியால் போட்டியை நடத்துவதற்கான உகந்த சூழ்நிலை இல்லை என்பதால் அவர்கள் போட்டியை ரத்து செய்தனர்.

போட்டி கைவிடப்பட்டதால் நீண்ட நேரமாக காத்திருந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இது தொடர்பாக கிரிக்கெட் வாரியம் மீது கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் இந்த நேரத்தில் பனி இருக்கும் என்பதால் போட்டி அட்டவணையை அங்கு அமைத்தது தவறு என்று விமர்சிக்கப்பட்டுள்ளது.

காற்றின் தரக் குறியீடு மோசமாக இருந்து வரும் வட மாநிலங்களில் போட்டியை நடத்தியது தவறு என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள். இது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று அவர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையே பனியால் போட்டியை ரத்து செய்ததற்கு நடுவர்கள் மீது முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

நடுவர்களின் முடிவால் நான் உண்மையில் குழப்பம் அடைந்துள்ளேன். இந்த நிலைமை சீராகப்போவதில்லை. இதைவிட மோசமான சூழ்நிலைகளில் நான் முதல் தர போட்டியில் விளையாடி இருக்கிறேன். அதோடு ஒப்பிடும்போது இந்த சூழ்நிலை மிகவும் சிறந்தது.

இவ்வாறு உத்தப்பா கூறியுள்ளார்.

Tags:    

Similar News