மகளிர் உலக கோப்பை: இந்தியாவுக்கு 289 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இங்கிலாந்து
- இங்கிலாந்து வீராங்கனை நைட் 109 ரன்கள் விளாசினார்.
- இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 4 விக்கெட் வீழ்த்தினார்.
50 ஓவர் ஐசிசி மகளிர் உலக கோப்பையை இந்தியா நடத்தி வருகிறது. பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடக்கிறது.
இந்தூரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் பெற்றால்தான் அரையிறுதி வாய்ப்பு பிரகாசித்துக் கொள்ள முடியும் என்பதால் வெற்றி பெறும் முனைப்போடு இந்திய வீராங்கனைகள் களம் இறங்கினர்.
டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீராங்கனை ஏமி ஜோன்ஸ் 68 பந்தில் 56 ரன்கள் விளாசினார். அடுத்து வந்த ஹீதர் நைட் அபாரமாக விளையாடினார். அவர் 91 பந்தில் 15 பவுண்டரி, 1 சிக்சருடன் 109 ரன்கள் விளாசினார். கேப்டன் ஸ்சிவர்-ப்ரன்ட் 49 பந்தில் 38 ரன்கள் அடிக்க இங்கிலாந்து 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய அணி சார்பில் தீப்தி சர்மா 10 ஓவரில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.