கிரிக்கெட் (Cricket)

டிம் டேவிட் அதிரடி சதம்: வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 3ஆவது டி20-யில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி

Published On 2025-07-26 09:24 IST   |   Update On 2025-07-26 09:24:00 IST
  • வெஸ்ட் இண்டீஸ் 214 ரன்கள் குவித்தது.
  • ஆஸ்திரேலியா 16.1 ஓவரில் சேஸிங் செய்தது

வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற நிலையில், 3ஆவது போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது.

இதில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 214 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களான பிராண்டன் கிங், கேப்டன் ஷாய் ஹோப் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிராண்டன் கிங் 36 பந்தில் 62 ரன்கள் விளாசினார். ஷாய் ஹோப் 57 பந்தில் 102 ரன்கள் குவித்தார்.

பின்னர் 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. மிட்செல் மார்ஷ் (22), மேக்ஸ்வெல் (20), ஜோஷ் இங்கிலீஷ் (15), கேமரூன் கிரீன் (11) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

5ஆவது விக்கெட்டுக்கு டிம் டேவிட் உடன் மிட்செல் ஓவன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக டிம் டுவிட் ஆட்டத்தில் அனல் பறந்தது. 16 பந்தில் அரைசதம் அடித்த டிம் டேவிட், 37 பந்தில் சதம் விளாசினார். அத்துடன் ஆஸ்திரேலியா 16.1 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் அடித்து அசத்தல் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, தொடரை வென்று முன்னிலை வகிக்கிறது.

37 பந்தில் சதம் விளாசிய டிம் டேவிட், டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் அணி வீரர்களில் 3ஆவது இடத்தை பிடித்துள்ளார். ரோகித் சர்மா மற்றும் டேவிட் மில்லர் 35 பந்தில் சதம் விளாசியுள்ளனர்.

Tags:    

Similar News