கிரிக்கெட் (Cricket)

ஜடேஜா அசத்தல்: 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 4 விக்கெட்டுகளை இழந்து திணறல்

Published On 2025-10-11 17:17 IST   |   Update On 2025-10-11 17:17:00 IST
  • வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக அதனேஸ் 41 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
  • இந்திய தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டும் குல்தீப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

புதுடெல்லி:

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

முதலில் விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175, கில் 129 ரன்கள் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்டுகளையும் ரோஸ்டன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அணியின் தொடக்க வீரர்களாக ஜான் கேம்பல் மற்றும் சந்தர்பால் களமிறங்கினார். இவர்கள் இருவரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினர்.

இதனை தொடர்ந்து 7-வது ஓவரில் சுழற்பந்து வீச்சை களமிறக்கினார் சுப்மன் கில். அந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசிய கேம்பல் 2-வது பந்தில் சாய் சுதர்சனின் அருமையான கேட்ச் மூலம் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 21 ரன்கள் சேர்த்தது.

அடுத்து வந்த அலிக் அதனேஸ் மற்றும் சந்தர்பால் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி திணறியது. 7-வது ஓவரில் முதல் விக்கெட்டை வீழ்த்திய இந்திய அணி, 2-வது விக்கெட்டை 28-வது ஓவரில் வீழ்த்தியது.

ஜடேஜா பந்து வீச்சில் சந்தர்பால் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதனை தொடர்ந்து அதனேஸ் 41 ரன்னில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ரோஸ்டன் வந்த வேகத்தில் டக் அவுட் முறையில் வெளியேறினார்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த சாய் ஹோப்- டெவின் இம்லாக் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டும் குல்தீப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags:    

Similar News