ஆன்லைன் கேம் தடை சட்டம்: ரூ. 200 கோடி வரை இழக்கும் ரோகித்- கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள்
- ரோகித், பும்ரா, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்கள் ட்ரீம்11 உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
- விராட் கோலி MPL-ஐ விளம்பரப்படுத்தினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சரான ஆன்லைன் கேமிங் நிறுவனமான ட்ரீம் 11 இந்திய அணி ஸ்பான்சர்ஷிப் பொறுப்பில் இருந்து விலகியுள்ளது. மத்திய அரசு ஆன்லைன் கேம்களை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வந்துள்ளதால் ட்ரீம் 11 உடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக முறித்துள்ளது. இனி இதுபோன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்போவதில்லை என்று பிசிசிஐ உறுதிபடத் தெரிவித்துள்ளது.
இதனால் துபாயில் தொடங்கும் ஆசியக் கோப்பை 2025 தொடருக்கு முன்னதாக, இந்திய அணிக்கு புதிய ஸ்பான்சரை பிசிசிஐ தேட வேண்டியுள்ளது. டொயோட்டா உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் இந்திய அணியின் ஜெர்சி ஸ்பான்சர்ஷிப்பில் இடம்பெற போட்டி போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2023-ல் ட்ரீம் 11 நிறுவனம் பிசிசிஐயுடன் ரூ.358 கோடி மதிப்பிலான மூன்று ஆண்டு ஒப்பந்தம் செய்திருந்தது. இதன்படி, பிசிசிஐக்கு ஆண்டுக்கு ரூ.119 கோடி வருவாய் கிடைத்தது. இந்த ஒப்பந்தம் 2026 வரை நீடிக்கவிருந்தது. ஆனால் மத்திய அரசின் சட்டம் காரணமாக இப்போது ஒப்பந்ததை முறிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
ட்ரீம் 11 நிறுவனம் ஸ்பான்சர்ஷிப் பொறுப்பில் இருந்து விலகியதால், பிசிசிஐக்கு ஆண்டுக்கு ரூ.119 கோடி நஷ்டம் ஏற்படும். முதன்முறையாக பிசிசிஐ இப்படி ஒரு நஷ்டத்தை சந்திப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் புதிய ஸ்பான்சர் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்யப்படுவதன் மூலம் பிசிசிஐ இந்த நஷ்டத்தை சரிகட்டி விடும் என பல்வேறு தரப்பினரும் தெரிவிக்கின்றனர்.
ஆனால், கிரிக்கெட் வாரியம் மட்டும் பாதிக்கப்படவில்லை. இந்தியாவின் முன்னணி வீரர்கள் கூட பெரிய ஒப்புதல் ஒப்பந்தங்களை இழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
அதன்படி ரோகித் சர்மா, பும்ரா, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், மற்றும் பாண்ட்யா சகோதரர்கள் ஆகியோர் ட்ரீம்11 உடன் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். இந்திய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், முகமது சிராஜ், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் My11 சர்க்கிளை ஆதரித்தார்கள். விராட் கோலி MPL ஐ விளம்பரப்படுத்தினார். அதே நேரத்தில் தோனி WinZO ஐ ஆதரித்தார்.
இதில் இடம் பெற்ற அனைத்து வீரர்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணம் வழங்கப்படுவதில்லை. கிரிக்பஸ் அறிக்கையின்படி, "கோலியின் ஒப்பந்தம் ஆண்டுக்கு சுமார் 10 முதல் 12 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டது. ரோகித் சர்மா மற்றும் தோனி 6 முதல் 7 கோடி ரூபாய்க்குள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ரத்து செய்யப்பட்ட ஒப்பந்தங்களால் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆண்டுக்கு 150 முதல் 200 கோடி ரூபாய் வரை இழக்க நேரிடும்.