டிஎன்பிஎல் 2025: சஞ்சய் யாதவ் அதிரடியில் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது திருச்சி
- முதலில் பேட் செய்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 20 ஓவரில் 150 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய திருச்சி அணி 151 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
திண்டுக்கல்:
9-வது டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல்லில் இன்று நடைபெற்ற கடைசி மற்றும் 28-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது.
விமல் குமார் 55 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். ஷிவம் சிங் 37, ஹனி சைனி 21 ரன்கள் எடுத்தனர்.
திருச்சி அணி சார்பில் அதிசயராஜ் டேவிட்சன், சரவணகுமார் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் திருச்சி கிராண்ட் சோழாஸ் களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். 24 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
5வது விக்கெட்டுக்கு கவுசிக், சஞ்சய் யாதவ் ஜோடி 98 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு துணை நின்றது. கவுசிக் 42 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய சஞ்சய் யாதவ் அரை சதம் கடந்தார்.
இறுதியில், திருச்சி அணி 19.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து வென்றதுடன் 4வது அணியாக பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.