கிரிக்கெட் (Cricket)

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர் தோல்விகள்.. மோசமான பட்டியலில் இணைந்த ரோகித்

Published On 2024-12-08 15:30 IST   |   Update On 2024-12-08 15:30:00 IST
  • இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா அணி 175 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.
  • ஆஸ்திரேலியா அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி பகல்-இரவாக அடிலெய்டில் நடைபெற்று வந்தது. இப்போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 180 ரன்னில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 337 ரன் குவித்தது.

ஆஸ்திரேலியா சார்பில் டிராவிஸ் ஹெட் 140 ரன்களையும், லபுஷேன் 64 ரன்களையும் எடுத்தனர். பும்ரா, முகமது சிராஜ் தலா நான்கு விக்கெட் கைப்பற்றினர். நிதிஷ் குமார் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

157 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா அணி 175 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதனால் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்ததோடு, ஆஸ்திரேலிய அணிக்கு 19 எனும் எளிய இலக்கை நிர்ணயித்தது. அதன்படி 2 ஆவது இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழப்பின்றி 19 ரன்களை அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமுறை தொடர் தோல்விகளை சந்தித்த இந்திய கேப்டன்கள் என்ற மோசமான பட்டியலில் ரோகித் சர்மா இடம்பிடித்தார்.

1967 - 68 ஆண்டுகளின் இந்திய அணியில் கேப்டனாக இருந்த மேக் படவுடி தொடர்ந்து 6 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவி இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். 1999 ஆம் ஆண்டில் தொடர்ந்து 5 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவி சச்சின் டெண்டுல்கர் இப்பட்டியலில் 2-ம் இடத்தை பிடித்துள்ளார்.

தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவி தத்தா கெய்க்வாட் (1959), எம்.எஸ்.தோனி (2011) (2014), விராட் கோலி (2020-21) ஆகியோரை சமன் செய்து ரோகித் சர்மா (2024) இப்பட்டியலில் 3-ம் இடத்தை பகிர்ந்துள்ளார்

Tags:    

Similar News