டி20 உலகக் கோப்பை 2026: இதை செய்தால் தான் இந்தியா அரையிறுதிக்கு முன்னேற முடியும்!
- வெறும் வெற்றிகளால் மட்டும் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாது.
- இப்படி செய்தால் மட்டுமே இந்திய அணியின் நெட் ரன் ரேட் அதிகரிக்கும்.
டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. க்ரூப் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
தொடரில் முதல் தோல்வியை சந்தித்த நிலையில், இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்புகள் பெருமளவு குறைந்துள்ளன. இந்த நிலையில், இந்திய அணி நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் தோல்வியை தழுவியதால் க்ரூப் 1-இல் இந்திய அணியின் நெட் ரன் ரேட் -3.800 என சரிந்துள்ளது. இந்த பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி +5.350 மற்றும் தென் ஆப்பிரிக்கா +3.800 புள்ளிகளுடன் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. இந்த பிரிவில் நெட் ரன் ரேட்டை பார்க்கும் போது, வெறும் வெற்றிகளால் மட்டுமே இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாது என்பது தெளிவாகிறது.
இதனால், இந்திய அணி தனது அடுத்த போட்டியில் ஜிம்பாப்வே அணியை கிட்டத்தட்ட 100 ரன்கள் அல்லது அதற்கும் அதிக வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். இப்படி செய்தால் மட்டுமே இந்திய அணியின் நெட் ரன் ரேட் அதிகரிக்கும். தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்தியா என மூன்று அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் இருந்து, இந்திய அணி ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வீழ்த்தி, தென் ஆப்பிரிக்கா அணி ஒரு போட்டியில் தோல்வியை தழுவும் பட்சத்தில் - நெட் ரன் ரேட் அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும்.
தற்போது இந்திய அணி பெரும் பின்னடைவில் உள்ளது. இதை சமாளித்து அடுத்த சுற்றுக்கு முன்னேற நாளை மறுநாள் சென்னையில் நடைபெறும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 220 ரன்களை குவிக்க வேண்டும். பிறகு இரண்டாவது இன்னிங்ஸில் ஜிம்பாப்வே அணியை 120 அல்லது அதற்கும் குறைந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்தி வெற்றி பெற வேண்டும்.
குறைந்தபட்சம் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரகாசமாக மாற்ற முடியும்.