முத்தரப்பு தொடர்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான்
- முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய ஜிம்பாப்வே அணி 19 ஓவரில் 126 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
ராவல்பிண்டி:
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடந்த 4-வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணிகள் மோதின.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. பாபர் அசாம் 74 ரன்னிலும், பர்ஹான் 63 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் பகர் ஜமான் 10 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்.
ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து, 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி ஜிம்பாப்வே களமிறங்கியது. பாகிஸ்தான் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் விக்கெட்கள் வீழ்ந்தன. உஸ்மான் தரிக் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார்.
ஜிம்பாப்வே அணியின் ரியான் பர்ல் தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்து 67 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், ஜிம்பாப்வே அணி 19 ஓவரில் 126 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 69 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முத்தரப்பு தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பாகிஸ்தான் சார்பில் உஸ்மான் தரிக் 4 விக்கெட்டும், முகமது நவாஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.