ரம்ஜான் கால போட்டியின்போது எனர்ஜி பானம் எடுத்துக் கொண்டது ஏன்?- மவுனம் கலைத்த முகமது ஷமி
- ரம்ஜான் மாதத்தின்போது நடைபெற்ற போட்டியின்போது, எனர்ஜிக்காக பானம் அருந்தியதை ரசிகர்கள் விமர்சித்தினர்.
- சமூக வலைத்தளங்களில் வெறுப்பு கருத்துகளை பதிவிட்டதுடன், ட்ரோல் செய்து வந்தனர்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் முகமது ஷமி. இவர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின், சுமார் 18 வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் தொடக்கத்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடினார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தப்பட்டது. அப்போது ரம்ஜான் மாதம் என்பதால் இஸ்லாமிய பெருமக்கள் நோன்பு கடைபிடிப்பார்கள்.
ஆனால், முகமது ஷமி போட்டியின்போது எனர்ஜிக் பானம் அருந்தினார். இஸ்லாம் மதத்தைச் சார்ந்த முகமது ஷமி, நோன்பு நேரத்தின்போது எப்படி பானம் அருந்தலாம் என இணைய தளத்தில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தினர். அவருக்கு எதிராக வெறுப்பு கருத்து பதிவிட்டு, ட்ரோல் செய்தனர்.
இதை தான் எப்படி எதிர்கொண்டேன் என்பது முகமது ஷமி விவரித்துள்ளார். இது தொடர்பாக முகமது ஷமி கூறியதாவது:-
நாங்கள் 42 அல்லது 45 டிகிரி வெயில் வெப்பத்தில் விளையாடி கொண்டிருக்கிறோம். நாங்கள் எங்களை தியாகம் செய்கிறோம். நாட்டிற்காக ஏதாவது செய்தல் அல்லது பயணம் போன்றவைகளுக்கு, எங்களுடைய சட்டத்தில் (இஸ்லாம்) விதிவிலக்கு உள்ளது. இந்த விசயங்களை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ரசிகர்கள் மற்றும் மக்கள் மற்றவர்களை முன்மாதிரிகளாகப் பார்க்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அந்த நபர் என்ன செய்கிறார், யாருக்காக செய்கிறார் என்பதையும் அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
நமது சட்டம் கூட சில விதிவிலக்குகளை அனுமதிக்கிறது. அதற்காக நாம் அபராதம் செலுத்தலாம் அல்லது பின்னர் அதற்கு ஈடுசெய்யலாம். அதை நான் செய்தேன்.
சிலர் தங்களை வெளிக்காட்டிக் கொள்ள, இதுபோன்ற விசயங்களை சுட்டிக்காட்ட விரும்புகிறார்கள். நான் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் படிப்பதில்லை. என்னுடைய குழு எனது கணக்குகளை நிர்வகிக்கிறது.
இவ்வாறு முகமது ஷமி தெரிவித்துள்ளார்.