லாகூர் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதல்நாளில் பாகிஸ்தான் 313/5
- தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- கேப்டன் ஷான் மசூத் 76 ரன்கள் சேர்த்தார்.
மூன்று வடிவிலான கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா அணி, பாகிஸ்தான் சென்றுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் லாகூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அப்துல்லா ஷபிக், இமாம்-உல்-ஹக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஷபிக் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷான் மசூத் களம் இறங்கினார். இவர் இமாம்-உல்-ஹக் உடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இமாம்-உல்-ஹக் 93 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். ஷான் மசூத் 76 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த பாபர் அசாம் (23), சாத் ஷகீல் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 6ஆவது விக்கெட்டுக்கு ரிஸ்வான் உடன் சல்மான் ஆகா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடியது. இருவரும் அரைசதம் அடிக்க பாகிஸ்தான் 300 ரன்களை கடந்தது.
இருவரும் முதல்நாள் ஆட்டம் முடியும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் பாகிஸ்தான் முதல்நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் குவித்துள்ளது. ரிஸ்வான் 62 ரன்களுடனும், சல்மன் ஆகா 52 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் சீனுரான் முத்துசாமி 2 விக்கெட் வீழத்தினார். ரபடா, சுப்புராயன், ஹார்மன் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.