ஐ.பி.எல்.(IPL)

பஞ்சாப் கிங்ஸ் உரிமையாளர்கள் இடையே பங்காளி சண்டை.. நீதிமன்றத்தில் பிரீத்தி ஜிந்தா வழக்கு!

Published On 2025-05-23 11:50 IST   |   Update On 2025-05-23 11:50:00 IST
  • கூட்டத்தில் முனிஷ் கன்னா புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
  • பிரீத்தி ஜிந்தாவுடன், மற்றொரு இயக்குநர் கரண் பாலும் கலந்து கொண்டார்.

பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா, ஐபிஎல் அணியான பஞ்சாப் கிங்ஸின் இணை உரிமையாளர் ஆவார். இந்த அணியின் உரிமையை வைத்திருக்கும் கேபிஹெச் டிரீம் கிரிக்கெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் இணை இயக்குநர் பதவியை பிரீத்தி ஜிந்தா வகிக்கிறார்.

இந்நிலையில் நிறுவனத்தின் இணை இயக்குநர்களான மோஹித் பர்மன் மற்றும் நெஸ் வாடியா ஆகியோருக்கு எதிராக சண்டிகர் நீதிமன்றத்தில் பிரீத்தி ஜிந்தா வழக்குத் தொடர்ந்துள்ளார்.

நிறுவனம் சார்பில் ஏப்ரல் 21 அன்று நடைபெற்ற கூட்டத்தில் முனிஷ் கன்னா புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டார். இருப்பினும், இந்தக் கூட்டத்தை நடத்துவதில் 'நிறுவனங்கள் சட்டம், 2013' மற்றும் பிற விதிகள் பின்பற்றப்படவில்லை என்று பிரீத்தி ஜிந்தா தனது மனுவில் குற்றம் சாட்டினார்.

இந்த கூட்டம் குறித்து ஏப்ரல் 10 ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் தனக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும், தான் எழுப்பிய ஆட்சேபனைகள் புறக்கணிக்கப்பட்டதாக பிரீத்தி ஜிந்தா கூறினார்.

சர்ச்சைக்குரிய இந்த கூட்டத்தில் பிரீத்தி ஜிந்தாவுடன், மற்றொரு இயக்குநர் கரண் பாலும் கலந்து கொண்டார். முனிஷ் கன்னாவின் நியமனத்தை இருவரும் கடுமையாக எதிர்த்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், மோஹித் பர்மன் மற்றும் நெஸ் வாடியாவின் ஆதரவுடன் கூட்டம் தொடர்ந்ததாகவும், கன்னாவின் நியமனம் இறுதி செய்யப்பட்டதாகவும் பிரீத்தி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த சூழலில், ஏப்ரல் 21 அன்று நடைபெற்ற கூட்டத்தையும் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளையும் ரத்து செய்யுமாறு பிரீத்தி ஜிந்தா நீதிமன்றத்தை நாடியுள்ளார். முனிஷ் கன்னா இயக்குநராக செயல்படுவதைத் தடை செய்ய வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கேட்டுக் கொண்டார். இந்த விவகாரம் ஐபிஎல் வட்டாரங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

Tags:    

Similar News