ஐ.பி.எல்.(IPL)

எஞ்சிய 16 ஆட்டத்துக்கான ஐ.பி.எல். போட்டி அட்டவணை இன்று அறிவிப்பு?

Published On 2025-05-12 14:39 IST   |   Update On 2025-05-12 14:39:00 IST
  • டெல்லி அணியில் விளையாடும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஸ்டார்க் இந்தியா திரும்பமாட்டார் என்று அறிவித்துவிட்டார்.
  • சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் ஆகிய 3 அணிகள் ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டன.

புதுடெல்லி:

18-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்தப் போட்டி பல்வேறு நகரங்களில் நடைபெற்றது.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ந் தேதி தர்மசாலாவில் நடைபெற்ற பஞ்சாப்-டெல்லி இடையேயான ஆட்டம் பாதியில் கைவிடப்பட்டது. இதை தொடர்ந்து போர் பதற்றம் எதிரொலியாக ஐ.பி.எல். போட்டி 1 வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையே இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து ஐ.பி.எல். போட்டியை நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. இது தொடர்பாக நேற்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி ஐ.பி.எல். எஞ்சிய ஆட்டங்களுக்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

லக்னோ-பெங்களூரு அணிகள் மோதும் ஆட்டத்தில் இருந்து போட்டி தொடங்கும். டெல்லி-பஞ்சாப் இடையே பாதியில் ரத்து செய்யப்பட்ட ஆட்டம் மீண்டும் நடைபெறாது என்றும், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.

இதனால் எஞ்சிய 12 லீக் ஆட்டங்கள், 4 பிளே ஆப் போட்டி ஆக மொத்தம் 16 ஆட்டங்களுக்கான திருத்தி அமைக்கப்பட்ட அட்டவனையை வெளியிடுகிறது.

வருகிற 16 அல்லது 17-ந் தேதி ஐ.பி.எல். போட்டி மீண்டும் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தர்மசாலா, டெல்லி, சண்டிகர், ஜெய்ப்பூர், மும்பை ஆகிய நகரங்களில் மீண்டும் போட்டி நடைபெற வாய்ப்பு இல்லை.

சென்னை, ஐதராபாத், பெங்களூரு மற்றும் லக்னோ ஆகிய 4 நகரங்களில் எஞ்சிய ஆட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். இறுதிப்போட்டி கொல்கத்தாவில் நடைபெற வாய்ப்பு இல்லை. இறுதிப்போட்டி ஜூன் 1-ந் தேதி அகமதாபாத்தில் நடைபெறலாம் என்று தெரிகிறது.

குவாலிபயர் 1 மற்றும் எலிமினேட்டர் ஆட்டங்கள் ஐதராபாத்தில் தான் நடைபெறும். அதில் மாற்றம் இருக்காது.

போர் பதற்றத்தால் போட்டி 1 வாரத்துக்கு தள்ளி வைக்கப்பட்டதால் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் நாடு திரும்பி விட்டனர். அவர்கள் ஐ.பி.எல். போட்டிக்காக மீண்டும் இந்தியா வருவது சந்தேகமே.

டெல்லி அணியில் விளையாடும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஸ்டார்க் இந்தியா திரும்பமாட்டார் என்று அறிவித்துவிட்டார். இது டெல்லி அணிக்கு பின்னடைவாகும். அதேபோல் பெங்களூர் அணியில் விளையாடும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீரர் ஹாசல்வுட் காயத்தால் இந்தியா வரமாட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய 3 அணிகள் ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டன. 4 இடத்துக்கு 7 அணிகள் போட்டியில் உள்ளன.

Tags:    

Similar News