கிரிக்கெட் (Cricket)

ஜூனியர் ஆசிய கோப்பை: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா

Published On 2024-12-06 23:24 IST   |   Update On 2024-12-06 23:24:00 IST
  • டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
  • அடுத்து ஆடிய இந்தியா 3 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஷார்ஜா:

11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.

லீக் சுற்றுகள் முடிவில் பாகிஸ்தான், இந்தியா, இலங்கை , வங்கதேசம் ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின.

இந்நிலையில், 2வது அரையிறுதியில் இலங்கை, இந்தியா அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை 173 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் லக்வின் அபேசிங்க 69 ரன் எடுத்தார்.

இந்தியா சார்பில் சேத்தன் சர்மா 3 விக்கெட், ஆயுஷ் மத்ரே, கிரண் சோர்மலே ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 174 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் இலங்கை பந்துவீச்சை அடித்து நொறுக்கினர்.

ஆயுஷ் மத்ரே 34 ரன்னிலும், ஆண்ட்ரே சித்தார்த் 22 ரன்னிலும் அவுட்டாகினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி அரை சதமடித்து 67 ரன்னுக்கு அவுட்டானார்.

இறுதியில் இந்தியா 21.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆட்ட நாயகன் விருது வைபவ் சூர்யவன்ஷி க்கு வழங்கப்பட்டது.

முதல் அரையிறுதியில் பாகிஸ்தானை சுருட்டி எளிதில் வீழ்த்தியது வங்கதேசம். இறுதிப்போட்டியில் வங்கதேசத்துடன் இந்திய அணி மோதுகிறது.

Tags:    

Similar News