கிரிக்கெட் (Cricket)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20: இந்தியா 4.5 ஓவரில் 52/0- மழையால் ஆட்டம் நிறுத்தம்

Published On 2025-11-08 14:35 IST   |   Update On 2025-11-08 14:35:00 IST
  • அபிஷேக் சர்மா இரண்டு முறை அவுட்டாவதில் இருந்து தப்பினார்.
  • சுப்மன் கில் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகள் விளாசினார்.

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்தியா முதலில் களம் இறங்கியது. அபிஷேக் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆட்டத்தின் 4ஆவது பந்தில் அபிஷேக் சர்மா பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் மேக்ஸ்வெல்லிடம் எளிதாக கேட்ச் கொடுத்தார். அந்த கேட்சை மேக்ஸ்வெல் பிடிக்க தவறினார். இதனால் அபிஷேக் சர்மா 5 ரன்னில் அவுட்டாவதில் இருந்து தப்பித்தார்.

3ஆவது ஓவரில் கில் தொடர்ந்து நான்கு பவுண்டரி விளாசினார். 4ஆவது ஓவரில் அபிஷேக் சர்மா மீண்டும் அவுட்டாவதில் இருந்து தப்பினார். எல்லிஸ் பந்தில் துவார்சுயிஸ் கேட்ச் மிஸ் செய்தார். இதனால் 11 ரன்னில் மீண்டும் ஒரு வாய்பு கிடைத்தது.

இந்திய அணி 4.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்திருக்கும்போது, மழை வருவதற்கான அறிகுறி தென்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர் மழை பெய்ய தொடங்கியது. இதனால் ஆட்டம் தொடர்ந்து நிறுத்தப்பட்டது.

அபிஷேக் சர்மா 13 பந்தில் 23 ரன்களும், சுப்மன் கில் 16 பந்தில் 29 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News