டெல்லியில் 2வது டெஸ்ட்: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்
- அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் வென்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.
- இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் டெல்லியில் இன்று தொடங்குகிறது.
புதுடெல்லி:
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
அகமதாபாத்தில் நடந்த முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்தியா 1-0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுல் கடைசி 6 டெஸ்டில் 3 சதம் அடித்து சிறப்பான பார்மில் உள்ளார். ஜெய்ஸ்வால் சிறப்பாக துவக்கினாலும் பெரிய ஸ்கோராக மாற்ற தவறுகிறார். மூன்றாவது இடத்தில் களமிறங்கும் சாய் சுதர்சன் இதுவரை 4 டெஸ்டில் 147 ரன்கள் எடுத்துள்ளார்.
கேப்டன் சுப்மன் கில் முதல் டெஸ்டில் அரைசதம் அடித்தார். விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல், ஜடேஜா ஆகியோர் சதம் விளாசி கைகொடுத்தனர்.
பந்துவீச்சைப் பொறுத்தவரை முகமது சிராஜ், 7 விக்கெட் சாய்த்துள்ளார். பும்ராவும் கைகொடுக்கிறார். சுழலில் ஜடேஜா, குல்தீப், வாஷிங்டன் தங்களது பணிகளைச் சிறப்பாக செய்து முடிக்கின்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் அரங்கில் மோசமான நிலையில் உள்ளது. முதல் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் மொத்தம் 89.2 ஓவர்கள் பேட்டிங் செய்தனர். பந்துவீச்சும் எடுபடவில்லை.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இதுவரை 101 டெஸ்டில் மோதின. இந்தியா 24, வெஸ்ட் இண்டீஸ் 30ல் வென்றன. 47 போட்டி டிரா ஆனது.
டெல்லி டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பாக செயல்பட்டு போட்டியில் வென்று தொடரை சமனில் முடிக்க விரும்பும். ஆனால் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றவே விரும்புகிறது.