null
IND Vs SA : டெஸ்ட் வரலாற்றில் முதல் முறையாக உணவு இடைவேளைக்கு முன் Tea break.. ஏன் தெரியுமா?
- இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் 3 வடிவிலான தொடரில் அடுத்த மாதம் விளையாட உள்ளது.
- இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் 14-ந் தேதி தொடங்குகிறது.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுடன் விளையாட உள்ளது.
சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதலில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்திலும் 2-வது டெஸ்ட் போட்டி கவுத்தாத்தியிலும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் கவுத்தாத்தி மைதானத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியின் செசன்களில் (இடைவேளை) சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி மதிய உணவு இடைவேளைக்கு முன் தேநீர் இடைவேளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் உள்ள கவுத்தாத்தியில் சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி முதல் செசன் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கி காலை 11:00 மணிக்கு முடிவடையும். அதைத் தொடர்ந்து தேநீர் இடைவேளை எடுக்கப்படும். 2-வது செசன் காலை 11:20 மணி முதல் பிற்பகல் 1:20 மணி வரை நடைபெறும்.
அதன் பிறகு வீரர்கள் மதிய உணவிற்கு இடைவேளை எடுப்பார்கள். மதிய உணவுக்குப் பிறகு முதல் நாளின் மூன்றாவது மற்றும் இறுதி செசன் ஆகும். அது இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, இந்தியாவில் டெஸ்ட் போட்டிகள் காலை 9:30 மணிக்குத் தொடங்கும், மதிய உணவு காலை 11:30 மணிக்கு நடைபெறும். இரண்டாவது அமர்வு காலை 12:10 மணி முதல் பிற்பகல் 2:10 மணி வரை நடைபெறும், அதைத் தொடர்ந்து தேநீர் இடைவேளை இருக்கும். இறுதி அமர்வு பிற்பகல் 2:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடைபெறும், மேலும் பகலில் 90 ஓவர்கள் விளையாட அனுமதிக்க அரை மணி நேரம் நீட்டிக்கப்படலாம்.