CSK வீரர் மிரட்டல் பந்து வீச்சு: சூப்பர் ஓவரில் பஞ்சாப்பை வீழ்த்திய அரியானா
- அரியானா- பஞ்சாப் ஆகிய இரு அணிகளும் 207 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டிரா ஆனது.
- இதனால் போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது.
18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டி ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அங்கிட் குமார் தலைமையிலான அரியானா அணியும் அபிஷேக் சர்மா தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அரியானா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தது. இதனால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது.
அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த ஓவரை அன்ஷுல் காம்போஜ் வீசினார். முதல் பந்தில் 1 ரன் விட்டுக்கொடுத்த அவர் அடுத்த 2 பந்தில் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் அபிஷேக் சர்மா, சன்வீர் சிங் ஆகியோர் முதல் பந்தில் டக் அவுட் ஆனார்கள். இதனால் அரியானா அணிக்கு 2 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை அரியானா அணி முதல் பந்திலேயே அடித்து வெற்றி பெற்றது.
சூப்பர் ஓவரில் மிரட்டிய அன்ஷுல் காம்போஜ் சிஎஸ்கே அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் என்பது குறிப்பிடத்தக்கது.