ஆப்கானிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் நடைபெறுவது உலகக் கோப்பையை விட பெரியது: ரஷித் கான்
- ஆப்கானிஸ்தான் மற்ற நாடுகளில் உள்ள மைதானங்களை சொந்த மைதானமாக கொண்டு விளையாடுகிறது.
- சொந்த நாட்டில் விளையாடுவது கனவை விட பெரியது என்கிறார் ரஷித் கான்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறும் போட்டியில் ஆப்கானிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்த போட்டிக்கு ஆப்கானிஸ்தான் அணி தயாராகி வருகிறது. இந்த நிலையில் அந்த அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரும், கேப்டனுமான ரஷித் கான் கூறியதாவது:-
உண்மையை சொல்லப்போனால் ஆப்கானிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறுவது எனக்கும், அணிக்கும், ஒவ்வொரு தனிப்பட்ட வீரருக்கும் இது உலகக் கோப்பையை விடப் பெரியது.
நாங்கள் ஆப்கானிஸ்தானில் ஒரு சர்வதேசப் போட்டியில் விளையாடுகிறோம். அப்போது ஆப்கானிஸ்தானில் உள்ள எங்கள் நாட்டு மக்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்கள் வீரர்களை எப்படி வரவேற்கிறார்கள், அவர்கள் கிரிக்கெட்டை எப்படி ரசிக்கிறார்கள் என்பதை இந்த உலகமே பார்க்கும்.
சொந்த நாட்டில் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவது என்பது ஒரு கனவை விடவும் மேலானது.
இவ்வாறு ரஷித் கான் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதம் மற்றும் ஸ்திரத்தன்மையற்ற நிலையால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றதில்லை. ஆப்கானிஸ்தான் அணி இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளில் உள்ள மைதானங்களை சொந்த மைதானமாக கொண்டு விளையாடி வருகிறது.