இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் விலகல்
- 3-வது டெஸ்டில் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
லண்டன்:
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ம் தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகின. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 62.1 ஓவர்களில் 192 ரன்னில் சுருண்டது.
இதன் மூலம் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 74.5 ஓவர்களில் 170 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி 23-ம் தேதி மான்செஸ்டரில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய டெஸ்ட் தொடரில் இருந்து இங்கிலாந்து முன்னணி வீரரான ஷோயப் பஷீர் விலகி உள்ளார்.
லார்ட்ஸ் டெஸ்டின் போது பஷீரின் இடது கைவிரலில் எழும்பு முறிவு ஏற்பட்டதால் அவர் அதற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.