கிரிக்கெட் (Cricket)
null

43 வயதிலும் குறையாத வேகம் - அடுத்த கிரிக்கெட் தொடருக்கு தயாராகும் கேப்டன் ஆண்டர்சன்

Published On 2026-02-26 15:30 IST   |   Update On 2026-02-26 15:34:00 IST
  • கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் லங்காஷயர் அணியின் முழுநேர கேப்டனாக ஆண்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 2025-ஆம் ஆண்டில் தற்காலிக கேப்டனாக ஆண்டர்சன் சிறப்பாகச் செயல்பட்டார்.

லண்டன்:

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 2024 ஜூலை மாதம் ஓய்வு பெற்றார். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 704 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்தார். அவரது அசாத்திய பங்களிப்பிற்காக 2025 ஏப்ரல் மாதம் அவருக்கு நைட்ஹுட் கௌரவம் வழங்கப்பட்டது.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும், இங்கிலாந்தின் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் சர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தனது 25-வது தொழில்முறை சீசனை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறார். 43 வயதாகும் அவர், 2026-ஆம் ஆண்டுக்கான கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் லங்காஷயர் (Lancashire) அணியின் முழுநேர கேப்டனாக செயல்படுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2025-ஆம் ஆண்டில் தற்காலிக கேப்டனாக சிறப்பாகச் செயல்பட்ட ஆண்டர்சன், தற்போது 2026 சீசனுக்கான நிரந்தர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

லங்காஷயர் அணியுடன் மேலும் ஓராண்டு காலத்திற்கு (2026 இறுதி வரை) ஆண்டர்சன் தனது ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளார்.

கடந்த 2025 சீசனில் இரண்டாம் பிரிவிற்கு தள்ளப்பட்ட லங்காஷயர் அணியை, மீண்டும் முதல் பிரிவிற்கு கொண்டு வருவதே தனது முதல் முன்னுரிமை என்று ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

ஆண்டர்சன் தலைமையிலான லங்காஷயர் அணி, தனது முதல் போட்டியை ஏப்ரல் 3, 2026 அன்று நார்தாம்ப்டன்ஷயர் (Northamptonshire) அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.

2025 கவுண்டி சீசனில் 6 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், இப்போதும் தனது பந்துவீச்சுத் திறன் குறையவில்லை என்பதை அவர் நிரூபித்துள்ளார்.

தற்போது லங்காஷயர் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ஸ்டீவன் கிராஃப்ட் (Steven Croft) தலைமையில், ஆண்டர்சன் தனது பயிற்சியைத் தொடங்கி தீவிரமாகத் தயாராகி வருகிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பந்து வீச்சு பயிற்சியில் ஆண்டர்சன் ஈடுப்பட்டு வருகிறது. அவரது பந்து வீச்சு வேகம் குறையாமல் உள்ளது.

Tags:    

Similar News