கிரிக்கெட் (Cricket)

கேப்டன் தேர்வு குறித்து எதிர்மறையாக பேச வேண்டாம்.. கில்லுக்கு கபில்தேவ் ஆதரவுடன் அறிவுரை

Published On 2025-05-28 19:10 IST   |   Update On 2025-05-28 19:10:00 IST
  • இளம் அணி என்பதால் எதிர்பார்ப்பு இல்லாதது கில் தலைமையிலான இந்திய அணிக்கு உதவும்.
  • இங்கிலாந்துக்கு இதற்கு முன் சென்ற போது சுப்மன் கில் பேட்டிங் சராசரி என்ன? என்பது முக்கியமல்ல.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது தலைமையில் இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் பெரியளவில் ரன்கள் குவிக்காத அவர், முதலில் பிளேயிங் லெவனில் இருப்பதற்கே பொருத்தமற்றவர் என்று சேவாக், ஸ்ரீகாந்த் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

இந்நிலையில் சுப்மன் கில் பற்றி எதிர்மறையான விஷயங்களை பேசுவதை விட நேர்மறையான விஷயங்களை பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும் என்று ஜாம்பவான் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இங்கிலாந்துக்கு இதற்கு முன் சென்ற போது சுப்மன் கில் பேட்டிங் சராசரி என்ன? என்பது முக்கியமல்ல. இப்போது நாம் எதிர்மறையாக பேச வேண்டாம். திறமையை வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர் அசத்துவார் என்பது எனக்குத் தெரியும். இருப்பினும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் விளையாடுவது எளிதாக இருக்காது.

சுப்மன் கில் கேப்டன்ஷிப் பதவிக்கு பொருத்தமாக இருப்பார். தேர்வாளர்கள் அனைத்து விஷயங்களையும் கணக்கிட்ட பின்பே நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் அவரை கேப்டனாக நியமித்துள்ளார்கள். அவருக்கு அணி மற்றும் ரசிகர்கள் ஆதரவு தேவை.

இளம் அணி என்பதால் எதிர்பார்ப்பு இல்லாதது கில் தலைமையிலான இந்திய அணிக்கு உதவும். சில நேரங்களில் நீங்கள் எதிர்பார்ப்பு இல்லாமல் அசத்துவது நல்லது. பும்ரா உள்ளிட்டோர் அவருக்கு ஆதரவு கொடுத்து கேப்டனாக வளர உதவுவார்கள் என்று நம்புகிறேன்.

சுப்மன் கில் பேட்டிங்கில் நல்ல ஃபார்மில் செயல்படுவது தன்னுடைய இலக்கை சாதிக்க உதவும். திடமான பேட்ஸ்மேனாக தெரியும் அவருக்காக மகிழ்ச்சியடைகிறேன்.

என்று கபில்தேவ் கூறினார்.

Tags:    

Similar News