ஆஷிக், ஜெகதீசன் அபாரம்: முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
- டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த சேலம் 160 ரன்கள் எடுத்தது.
சேலம்:
டி.என்.பி.எல். தொடரின் 17-வது லீக் போட்டி சேலத்தில் நடைபெற்றது. இதில் சேலம் ஸ்பர்டன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சேலம் ஸ்பர்டன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது. கேப்டன் அபிஷேக் 47 ரன்னும், ஹரி நிஷாந்த் 31 ரன்னும், சன்னி சாந்து 30 ரன்னும் எடுத்தனர். விஜய சங்கர் 2 ரன்னில் அவுட்டானார்.
சேப்பாக் அணி சார்பில் பிரேம் குமார் 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஆஷிக் 36 பந்தில் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மோகித் ஹரிஹரன் 32 ரன்கள் எடுத்தார். ஜெகதீசன் அரை சதம் கடந்து 50 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 16.3 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் சேப்பாக் அணி முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. சேப்பாக் அணி தான் ஆடிய 5 போட்டிகளிலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.