கிரிக்கெட் (Cricket)

விராட் கோலி 100 சதங்கள் அடிப்பார்- கவாஸ்கர் நம்பிக்கை

Published On 2025-12-08 10:50 IST   |   Update On 2025-12-08 10:50:00 IST
  • கோலி இன்னும் 3 ஆண்டுகள் விளையாடினால் கூட 16 சதங்கள் தான் தேவை.
  • ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி இப்படி 20 ஓவர் போட்டி அவதாரம் எடுப்பதை பார்ப்பது அரிது.

மும்பை:

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய வீரர் விராட்கோலி இரண்டு சதங்கள் விளாசினார். ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் அவர் இதுவரை 84 சதங்கள் (ஒரு நாள் போட்டியில் 53, டெஸ்டில் 30 மற்றும் 20 ஓவர் போட்டியில் ஒரு சதம்) அடித்துள்ளார். இந்த வகையில் சச்சின் டெண்டுல்கருக்கு (100 சதம்) அடுத்த இடத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில் டெண்டுல்கரின் சாதனையை கோலி சமன் செய்வார் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். கவாஸ்கர் கூறும் போது, 'கோலியால் 100 சதங்கள் ஏன் அடிக்க முடியாது? அவர் இன்னும் 3 ஆண்டுகள் விளையாடினால் கூட 16 சதங்கள் தான் தேவை. தற்போது அவர் சிறப்பான பேட்டிங் செய்து வருகிறார்.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் 2 சதம் எடுத்தார். அடுத்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு சதம் அடித்தால் சதங்களின் எண்ணிக்கை 86-ஐ தொடும். அதன் பிறகு அவர் நிச்சயம் 100 சதங்களை எட்டுவதற்கு நல்ல வாய்ப்புள்ளது.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் வலுவான அடித்தளம் அமைத்ததால் இந்தியாவின் வெற்றி உறுதி என்பதை உணர்ந்த கோலி தனக்கு தாமே மகிழ்ச்சியுடன் அதிரடியாக விளையாடினார். ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி இப்படி 20 ஓவர் போட்டி அவதாரம் எடுப்பதை பார்ப்பது அரிது' என்றார்.

மற்றொரு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், 'தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டங்களில் அடுத்தடுத்து 100 ரன்களுக்கு மேல் எடுத்தார். அவர் சதங்களின் சக்ரவர்த்தி. சூப்பர் பார்மில் உள்ளார். 2027-ம் ஆண்டு உலகக் கோப்பை உள்பட சுமார் 40 ஆட்டங்கள் மீதமுள்ளன. அதனால் அவரால் 100 சதங்கள் எட்ட முடியும்' என்றார்.

டெஸ்ட் மற்றும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட 37 வயதான கோலி தற்போது ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News