null
ஆஸ்திரேலியா "ஏ" அணி வீரர்களுக்கு தரக்குறைவான உணவு வழங்கப்பட்டதா? - ராஜீவ் சுக்லா விளக்கம்
- கான்பூரில் 3 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியா ஏ அணி விளையாடியது.
- 2ஆவது போட்டியின்போது சில வீரர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
ஆஸ்திரேலியா "ஏ" அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. நேற்றுடன் அதிகாரப்பூர்வமற்ற இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிக்கான தொடர்கள் முடிவடைந்தன. ஒருநாள் தொடர் கான்பூரில் நடைபெற்றது.
2ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணி வெற்றி பெற்றது. முதல் மற்றும் கடைசி போட்டியில் இந்தியா ஏ வெற்றி பெற்றது.
2ஆவது போட்டியின்போது ஆஸ்திரேலியா ஏ அணி வீரர்கள் சிலருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. ஹென்றி தோர்ன்டன் உடல்நிலை மிகவும் மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சரியாகிவிட்டது.
வீரர்களின் உடல் நலக்குறைவுக்கு உணவுதான் காரணம் என ஆஸ்திரேலியா ஏ அணி குற்றம்சாட்டியிருந்தது. இந்த நிலையில் பிசிசிஐ துணைத் தலைவரான ராஜீவ் சுக்லா, ஆஸ்திரேலியா ஏ அணியின் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
இது தொடர்பாக ராஜீவ் சுக்லா கூறியதாவது:-
உணவுதான் பிரச்சனையாக இருந்திருந்தால் இந்திய வீர்ரகள் உள்பட அனைத்து வீரர்களுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்க வேண்டும். வேறு ஏதாவது இருந்திருக்க வேண்டும். சிறந்த ஓட்டலில் இருந்து அவர்களுக்கு உணவு வரவழைக்கப்பட்டிருந்தது. அனைவரும் அந்த உணவை சாப்பிட்டார்கள். சில வீரர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு வேறு ஏதாவது தொற்று (infection) ஏற்பட்டிருக்கலாம்.
அங்கு ஏராளமான ஓட்டல்கள் இல்லை. இதனால் இந்த விசயம் பெரிதாக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு 300 அறைகள் கொண்ட 5 நட்டசத்திர ஓட்டல் தேவை. அதுபோன்ற ஓட்டல் இல்லை. 24 மணி நேரமும் செயல்படக் கூடிய சர்வதேச விமான நிலையம் அங்கு இல்லை. சிறந்த ஏற்பாடுகள் இருந்திருந்தால், அவர்களுக்கு பலன் தரக்கூடிய வகையில் இருந்திருக்கும்.
இவ்வாறு ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.