ரிஷப் பண்ட் காயம்: பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு- உள்ளூர் போட்டிகளில் அறிமுகமாகிறது புதிய விதி..!
- மோசமான காயம் ஏற்பட்டால் மாற்று வீரர் களம் இறங்க முடியாத நிலை ஏற்பட்டது.
- இங்கிலாந்து தொடரில் ரிஷப் பண்ட், கிறிஸ் வோக்ஸ் இதுபோன்ற நிலையை சந்தித்தனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்தவர்கள் மட்டுமே பேட்டிங் செய்ய முடியும். பந்து வீச முடியும். "Impact Player" என்ற முறை கிடையாது. தலையில் அடிபட்டு மூளை அழற்சி (concussion) ஏற்பட்டால் மட்டுமே, அவருக்குப் பதிலாக மாற்று வீரர் களம் இறங்கலாம்.
மற்றபடி காயம் ஏற்பட்டால் மாற்று வீரர் களம் இறங்க முடியாது. இந்தியா- இங்கிலாந்து தொடரின்போது 4ஆவது போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பண்ட்டிற்கு காலில் பந்து பலமாக தாக்கியதில் எழும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவரால் பேட்டிங் செய்ய முடியவில்லை. இதனால் கடைசி டெஸ்டில் இருந்து விலகினார்.
அதேபோன்று கடைசி போட்டியில் இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் பீல்டிங் செய்யும்போது, தோள்பட்டை இறங்கியது (dislocation). இதனால் அவர் பந்து வீசவில்லை. மேலும், பேட்டிங் செய்ய முடியாத நிலையில் ஒற்றைக்கையுடன் களம் இறங்கினார்.
இதுபோன்று விளையாட முடியாத வகையில் தீவிர காயம் ஏற்பட்டால் மாற்று வீரர் களம் இறக்கப்படலாம் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இதை சில கிரிக்கெட் வல்லுனர்கள் எதிர்த்தனர். சில ஆதரித்தனர். இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கேலிக்கூத்தானது எனச் சாடியிருந்தார்.
இந்த நிலையில் உள்ளூர் போட்டிகளில் தீவிர காயத்தால் ஒரு வீரரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டால், அவருக்குப் பதிலாக மாற்று வீரர் களம் இறக்கப்படலாம் என்ற விதியை பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளது. இது ஒன்றுக்கு மேற்பட்ட நாட்கள் நடைபெறும் போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும்.