கிரிக்கெட் (Cricket)

3-வது டெஸ்ட்: 4-ம் நாள் முடிவில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய AUS.. தோல்வியை தவிர்க்க போராடும் ENG

Published On 2025-12-20 12:59 IST   |   Update On 2025-12-20 12:59:00 IST
  • இங்கிலாந்து அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது.
  • இங்கிலாந்து அணிக்கு இன்னும் 228 ரன்கள் தேவை.

அடிலெய்டு:

ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான ஆசஸ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டுவில் நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 371 ரன் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 286 ரன் எடுத்தது. 85 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆஸ்திரேலியா நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 271 ரன் எடுத்து இருந்தது. டிராவிஸ் ஹெட் சதம் அடித்தார். அவர் 142 ரன்னுடனும், அலெக்ஸ் கேரி 52 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. 356 ரன்கள் முன்னிலை, கைவசம் 6 விக்கெட் என்ற நிலையில் ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது. டிராவிஸ் ஹெட் 170 ரன் குவித்து அவுட் ஆனார். டெஸ்டில் அவரது 2-வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 5-வது விக்கெட் ஜோடி 162 ரன் எடுத்தது.

அலெக்ஸ் கேரி 72 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். மற்ற வீரர்கள் எளிதில் ஆட்டம் இழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 84.4 ஓவரில் 349 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்துக்கு 435 ரன் இலக்காக இருந்தது.

இங்கிலாந்து தரப்பில் ஜோஸ் டங் 4 விக்கெட்டும், கார்ஸ் 3 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், வில் ஜேக்ஸ், பென் ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 435 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து அணி ஆடியது.

31 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 2 விக்கெட்டை இழந்தது. பென் டக்கெட் 4 ரன்னிலும், ஓலிபோப் 17 ரன்னிலும், கம்மின்ஸ் பந்தில் பெவிலியன் திரும்பினார்கள். 3-வது விக்கெட் டுக்கு கிராவ்லியுடன் ஜோ ரூட் ஜோடி சேர்ந்தார். இருவரும் பொறுமையாக விளையாடினர். இருந்தாலும் பேட் கம்மின்ஸ் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

சிறப்பாக விளையாடிய கிராவ்லி அரைசதம் கடந்து அசத்தினர். அடுத்து வந்த ஹாரி ப்ரூக் 30 ரன்னிலும் பென் ஸ்டோக்ஸ் 5 ரன்னிலும் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிராவ்லி 85 ரன்னிலும் நாதன் லயன் பந்துவீச்சில் வெளியேறினார்.

இதனால் இங்கிலாந்து அணி 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணிக்கு இன்னும் 228 ரன்கள் தேவை என்ற நிலையுடன் கடைசி நாளில் களமிறங்கும். 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் போட்டியில் வெற்றி பெறலாம் மேலும் தொடரை கைப்பற்றி விடலாம் என்ற நோக்கி ஆஸ்திரேலியா நாளை களமிறங்கும். ஆஸ்திரேலிய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

Tags:    

Similar News