அதிவேக சதத்தில் 2-வது இடம்: ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி சாதனை
- ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி இந்த ஆட்டத்தில் 73 பந்துகளில் சதத்தை எட்டினார்.
- உலக கோப்பை போட்டிகளில் அலிசா ஹீலியின் 4-வது சதமாக இது பதிவானது.
விசாகப்பட்டினம்:
13-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா, வங்கதேசம் அணிகள் மோதின.
முதலில் ஆடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 198 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 24.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலிய அணி முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி இந்த ஆட்டத்தில் 73 பந்துகளில் சதத்தை எட்டினார். பெண்கள் உலக கோப்பை வரலாற்றில் ஒரு வீராங்கனையின் 2-வது அதிவேக சதம் இதுவாகும். வெஸ்ட்இண்டீசின் டியான்ட்ரா டோட்டின் 2017-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 71 பந்தில் சதம் அடித்ததே சாதனையாக தொடருகிறது.
உலக கோப்பை போட்டிகளில் அலிசா ஹீலியின் 4-வது சதமாக இது பதிவானது. உலக கோப்பையில் அதிக சதம் விளாசிய வீராங்கனைகளின் பட்டியலில் 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார். முதலிடத்தில் இங்கிலாந்தின் நாட் சிவெர் (5 சதம்) உள்ளார்.