ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் சதம் அடித்த ருதுராஜ் - 53 ஆவது சதம் அடித்த கோலி
- ஒருநாள் கிரிக்கெட்டில் ருதுராஜ் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ராஞ்சியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் 14 ரன்களிலும் ஜெய்ஷ்வால் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்ததாக ஜோடி சேர்ந்த விராட் கோலி - ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது.
அதிரடியாக விளையாடிய ருதுராஜ் 77 பந்துகளில் சதமடித்து அசத்தினார். 12 பவுண்டரிகள், 2 சிக்சருடன் ஒருநாள் கிரிக்கெட்டில் ருதுராஜ் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 105 ரன்கள் அடித்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து ருதுராஜ் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய கோலி தனது 53 ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்து புதிய சாதனை படைத்தார். 90 பந்துகளில் கோலி சதமடித்தார்.
38 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் அடித்துள்ளது.