விளையாட்டு

சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐதராபாத் நாளை மோதல்

Published On 2025-04-24 10:11 IST   |   Update On 2025-04-24 10:11:00 IST
  • 3-வது வெற்றிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் காத்திருக்கிறது.
  • சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 5-வது ஆட்டமாகும்.

சென்னை:

ஐ.பி.எல். போட்டியின் 43-வது லீக் ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்-கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

5 முறை கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளது. 8 போட்டிகளில் விளையாடி இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 6-ல் தோற்றது. 4 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது. அதன் பிறகு ஆர்.சி.பி. (50 ரன்) , ராஜஸ்தான் ராயல்ஸ் (6 ரன்) , டெல்லி கேப்பிட்டல்ஸ் (25 ரன்) , பஞ்சாப் ( 18 ரன்), கொல்கத்தா (8 விக்கெட்) அணிகளிடம் தொடர்ச்சியாக தோற்றது. தனது 7-வது ஆட்டத்தில் லக்னோவை ( 5 விக்கெட்) வீழ்த்தியது. 8-வது போட்டியில் மும்பையிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் மோசமாக தோற்றது.

சி.எஸ்.கே. அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. எஞ்சிய 6 ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டும். அதே நேரத்தில் மற்ற அணிகளின் நிலையை பொறுத்துதான் பிளே ஆப் வாய்ப்பு இருக்கிறது.

நாளைய ஆட்டத்தில் ஐதராபாத்தை கண்டிப்பாக வெல்ல வேண்டிய நெருக்கடி உள்ளது. 3-வது வெற்றிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் காத்திருக்கிறது.

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 5-வது ஆட்டமாகும். இங்கு முதல் போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதன் பிறகு நடைபெற்ற 3 ஆட்டத்திலும் தோல்வியை தழுவியது. சேப்பாக்கத்தில் சி.எஸ். கே. வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை போன்று அதே நிலைமையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் இருக்கிறது.

2 வெற்றி, 6 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 9-வது இடத்தில் உள்ளது. சென்னையை விட ரன் ரேட்டில் முன்னிலையில் காணப்படுகிறது.

இந்த ஆட்டத்தில் தோற்கும் அணி போட்டியில் இருந்து வெளியேறும். இதனால் வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக போராடுவார்கள்.

Tags:    

Similar News