விளையாட்டு
அதிரடியாக ஆடிய நிகோலஸ் பூரன்

ஐபிஎல் கிரிக்கெட் - ஐதராபாத்தை 21 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி

Published On 2022-05-05 18:06 GMT   |   Update On 2022-05-05 18:06 GMT
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணியின் நிகோலஸ் பூரன், மார்கிராம் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது.
மும்பை:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ஐதராபாத் பீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் அதிரடியாக ஆடி 92 ரன்களுடனும், பாவெல் 67 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

ஐதராபாத் சார்பில் புவனேஸ்வர் குமார், சீன் அப்பாட், ஸ்ரேயாஸ் கோபால் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 7 ரன், கேப்டன் வில்லியம்சன் 4 ரன், ராகுல் திரிபாதி 22 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து இறங்கிய மார்கிராம், பூரன் ஜோடி அதிரடியாக ஆடியது. மார்கிராம் 25 பந்தில் 42 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து இறங்கிய ஷஷாங்க் 10 ரன்னில் வெளியேறினார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நிகோலஸ் பூரன் அதிரடியில் மிரட்டி அரை சதம் கடந்து, 34 பந்துகளில் 6 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 62 ரன்கள் எடுத்தார்.

இறுதியில், ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 186 ரன்களே எடுத்தது. இதையடுத்து, டெல்லி அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது டெல்லி அணியின் 5வது வெற்றி ஆகும்.
Tags:    

Similar News