விளையாட்டு
ராகுல் டிராவிட், அனுராக் தாக்கூர், விவேக் குமார்

விளையாட்டு வீரர்கள் பயிற்சிகளுக்கு அதிநவீன வசதிகளைப் பயன்படுத்த வேண்டும்- மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் வேண்டுகோள்

Published On 2022-05-04 01:15 IST   |   Update On 2022-05-04 01:15:00 IST
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 15 ஏக்கர் பரப்பளவில் உலகத்தரத்தில் படுகோனே – டிராவிட் உயர் சிறப்பு விளையாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:

பெங்களூருவில்  உள்ள படுகோனே – டிராவிட் உயர்சிறப்பு விளையாட்டு மையத்தில், பேட்மின்டன், கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ், நீச்சல், ஸ்குவாஷ், கூடைப்பந்து, துப்பாக்கிசுடும் பயிற்சி போன்றவை வழங்கப்படுகிறது.  

வெற்றி வாய்ப்புள்ள விளையாட்டு வீரர்களின் திறமையை மதிப்பீடு செய்து, அவர்களுக்கேற்ற பயிற்சிக்குத் தேவையான பைலேட் அறை மற்றும் கிரையோதெரபி பிரிவு உள்ளிட்ட அதிநவீன சாதனங்கள் இந்த மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த உயர்சிறப்பு விளையாட்டு மையத்தை மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் ஆய்வு செய்தார். பின்னர் அங்கிருந்த விளையாட்டு வீரர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், விளையாடுவதற்காக, யாரும் வார இறுதி நாட்களுக்காகவோ, விடுமுறை தினத்திற்காகவோ காத்திருக்கத் தேவையில்லை என்றார். எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் விளையாடத் தொடங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

சர்வதேச அளவில் போட்டியிடுவதற்குத் தேவையான கூடுதல் திறனை வளர்த்துக் கொள்ள ஏதுவாக, இந்த மையத்தில் உள்ள அதிநவீன வசதிகளை வீரர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆய்வின்போது, கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், படுகோனே-டிராவிட் உயர்சிறப்பு விளையாட்டு மையத்தின் மேலாண்மை இயக்குனர் விவேக் குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Similar News