விளையாட்டு
மயங்க் அகர்வால் - ஹர்திக் பாண்ட்யா

குஜராத்தின் தொடர் வெற்றியை பஞ்சாப் தடுக்குமா?

Published On 2022-05-03 11:11 IST   |   Update On 2022-05-03 11:11:00 IST
ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
மும்பை:

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

குஜராத் அணி 9 ஆட்டத்தில் 8 வெற்றி பெற்றுள்ளது. 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அந்த அணி தொடர்ச்சியாக 5 வெற்றிகளை பெற்றது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று பிளேஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெறும் முனைப்பில் குஜராத் உள்ளது. அந்த அணி பேட்டிங்கில் விர்த்திமான் சகா, சுப்மன் கில், ஹர்திக் பாண்ட்யா, டேவிட் மில்லர், ராகுல் திவேதியா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

பந்து வீச்சில் முகமது சமி, ரஷித்கான் பெர்குசன் ஆகியோர் உள்ளனர்.

பேட்டிங், பந்து வீச்சில் சம பலத்துடன் இருக்கும் குஜராத் அணி ஏற்கனவே பஞ்சாப்புடன் மோதிய ஆட்டத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி 9 ஆட்டத்தில் 4 வெற்றி, 5 தோல்வி பெற்று 8 புள்ளிகளுடன் உள்ளன.

அந்த அணியில் ஷிகர்தவான், லிவிங்ஸ்டன், பானுகா ராஜபக்சே ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ரபடா, ராகுல் சாகர், ரிஷிதவான், சந்தீப் சர்மா ஆகியோர் உள்ளனர்.

பஞ்சாப் அணி ஒரு ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினால் அந்த உத்வேகத்தை அடுத்த ஆட்டத்தில் தொடர தவறவிட்டு விடுகிறது. இது அந்த அணிக்கு பின்னடைவாக இருக்கிறது.

குஜராத்துக்கு எதிரான கடந்த லீக் ஆட்டத்தில் 190 ரன் இலக்கை நிர்ணயித்தும் தோல்வி அடைந்ததால் அதற்கு பதிலடி கொடுக்க பஞ்சாப் முயற்சிக்கும். மேலும் குஜராத்தின் தொடர் வெற்றிக்கு பஞ்சாப் முட்டு கட்டை போடுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Similar News