செய்திகள்
நியூசிலாந்தை ஆட்டம் காண வைத்த ஸ்காட்லாந்து: 16 ரன்னில் தோல்வியடைந்தது
நியூசிலாந்து அணி 172 ரன்கள் விளாசியதால், ஸ்காட்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் 16 ரன்னில் வெற்றி பெற்று தோல்வியில் இருந்து தப்பியது.
டி20 உலக கோப்பையில் இன்று துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து- ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்தால், இந்தியாவின் அரையிறுதிக்கான வாய்ப்பு சற்று பிரகாசமாகும் என்ற நிலை இருந்தது.
ஸ்காட்லாந்து டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு ஆடுகளம் கடினமான இருந்து வரும் நிலையில் நியூசிலாந்து அணி சரிவை சந்தித்தது. அந்த அணி 6.1 ஓவரில் 52 ரன்கள் அடித்தாலும், 3 விக்கெட்டை இழந்தது.
ஆனால், தொடக்க வீரர் மார்ட்டின் கப்பதில் அதிரடியாக விளையாடி 56 பந்தில் 93 ரன்கள் விளாசினார். அவரது ஸ்கோரில் 7 சிக்சர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். அவருக்கு துணையாக கிளென் பிலிப்ஸ் 37 பந்தில் 33 ரன்கள் சேர்த்தார். இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. கப்தில்- பிலிப்ஸ் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 105 ரன்கள் விளாசியது.
பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து களம் இறங்கியது. மிகப்பெரிய அளவில் ஸ்கோர் அடிக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு வீரர்களும் குறைந்த பந்தில் அதிக ரன்கள் விளாசினர். இதனால் முதல் 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் குவித்தது.
அதன்பிறகும் வெற்றிபெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் விளையாடியது ஸ்காட்லாந்து. 18 ஓவர் முடிவில் 134 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 2 ஓவரில் 39 ரன் தேவைப்பட்டது. 19-வது ஓவரில் 13 ரன்கள் அடிக்க, ஸ்காட்லாந்து அணிக்கு கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டது.
ஸ்காட்லாந்து கடைசி ஓவரில் 9 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் ஸ்காட்லாந்து அணியால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்களே அடிக்க முடிந்தது. இதனால் 16 ரன்னில் தோல்வியை சந்தித்தது. நியூசிலாந்து ஒருவேளை 150 ரன்கள் எடுத்திருந்தால் ஸ்காட்லாந்த வெற்றி பெற்றிருக்கும்.