செய்திகள்
ஜெய்ஸ்வால்

சி.எஸ்.கே.-வை மிரட்டிய ஜெய்ஸ்வால்: 19 பந்தில் அரைசதம் அடித்து சாதனை

Published On 2021-10-02 22:42 IST   |   Update On 2021-10-02 22:42:00 IST
6 பவுண்டரி, 3 சிக்சருடன் 19 பந்தில் அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால், சர்வதேச போட்டியில் விளையாடாமல் அதிகவேகமாக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 2-வது இடம் பிடித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி அபு தாபியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 60 பந்தில் 9 பவுண்டரி, 5 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சி.எஸ்.கே. வீரர்களின் பந்து வீச்சை நான்கு திசைக்கும் விரட்டினார். இதனால் 19 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் ஐ.பி.எல். தொடரில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 2-வது இடம் பிடித்தார். இதற்கு முன் இஷான் கிஷன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிராக 2018 சீசனில்  17 பந்தில் அரைசதம் விளாசினார்.

தீபக் ஹூடா  20 மற்றும் 22 பந்துகளிலும், குருணல் பாண்ட்யா 22 பந்துகளிலும் அரைசதம் அடித்துள்ளனர்.

Similar News