செய்திகள்
பேட்டிங் சொதப்பல்: டெல்லிக்கு 130 ரன்களே இலக்காக நிர்ணயித்துள்ளது மும்பை இந்தியன்ஸ்
ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு என முக்கியமான பேட்ஸ்மேன்கள் சொதப்ப மும்பை இந்தியன்ஸ் அணியால் 20 ஓவரில் 129 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 46-வது லீக் ஆட்டம் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷாப் பண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2-வது ஓவரில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 10 பந்தில் 7 ரன்கள் சேர்த்தார். டி காக் 19 ரன்னில் வெளியேறினார். இதுவரை சரியாக விளையாடாத சூர்யகுமார் யாதவ் இன்று நம்பிக்கையுடன் விளையாடினார். இருந்தாலும் 26 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் மும்பை இந்தியன்ஸ் ஸ்கோர் மந்தமான நிலையிலேயே உயர்ந்தது. சவுரப் திவாரி 15 ரன்னிலும், பொல்லார்டு 6 ரன்னில் ஆட்டமிழந்தனர்.
6-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்ட்யா உடன் குருணல் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். மும்பை இந்தியன்ஸ் 17 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.
18-வது ஓவரில் ஹர்திக் பாண்ட்யா இரண்டு பவுண்டரிகள் விளாசினார். அதனால் மும்பைக்கு 9 ரன்கள் கிடைத்தது. 19-வது ஓவரை அவேஷ் கான் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழந்தார். அவர் 18 பந்தில் 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கவுல்டர்-நைல் 1 ரன் எடுத்த நிலையில் 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜயந்த் யாதவ் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்ட மும்பை இந்தியன்ஸ் 19-வது ஓவரில் 7 ரன்கள் எடுத்தது.
கடைசி ஓவரை அஷ்வின் வீசினார். இந்த ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்த மும்பை இந்தியன்ஸ் இரண்டு சிக்சருடன் 13 ரன்கள் சேர்த்தது. இதனால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் அடித்துள்ளது.
டெல்லி அணியில் அக்சார் பட்டேல், அவேஷ் கான் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.